கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களுக்கு சீட் இல்லை - ஆதங்கத்தை கொட்டிய ஆர்.எஸ்.பாரதி
திமுகவில் உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. உழைக்காதவர்களுக்கு தான் சீட் கிடைக்கிறது. எனக்கே 63 வயதில் தான் எம்.பி. பதவி கிடைத்திருக்கிறது என்று ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார் ஆர். எஸ் .பாரதி.
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி. இவர், சென்னையில் நடந்த திமுக வழக்கறிஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி உள்ளார். அப்போது, இங்கே இருக்கும் பாதி பேருக்கு பதவி கிடைக்கவில்லையே என்கிற வேதனை இருக்கும். உழைத்து பதவி கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்துடன் இருப்பீர்கள். அது நியாயம் தான். உழைத்தவர்களுக்கு இங்கே சீட் இல்லை. உழைக்காதவர்கள் பதவிக்கு வந்திருப்பதை பார்த்தால் வேதனையாகத் தான் இருக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்று கூறியிருக்கிறார்.
அவர் மேலும் , கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள். ஒரே கொடி, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று காலம் காலமாக இருந்து விட்டதால் எனக்கு 63 வயதில் தான் எம்பி பதவி கிடைத்திருக்கிறது. ஆனால் நான் கட்சிக்கு அழைத்து வந்தவர்கள் எல்லாம் எம். எல். ஏ , அமைச்சராகி விட்டார்கள்.
கட்சிக்கு விசுவாசகமாக இருந்தால் அவ்வளவு எளிதில் பதவி கிடைத்துவிடாது. இதையெல்லாம் ஜீரணித்துக் கொண்டுதான் கட்சிக்குள் இருக்க வேண்டும். பொறுமையாக இருந்தால் என்றைக்காவது பதவி வந்துவிடும் என்று சொல்லி திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.