உழைக்காமல் வேறொருவரின் பெயரை பயன்படுத்தி பதவியில் இருப்பவருக்கு நான் பயப்படமாட்டேன்.. தாக்கரேவை தாக்கிய நவ்னீத்
உழைக்காமல் வேறொருவரின் பெயரை பயன்படுத்தி தனது பதவியில் இருப்பவருக்கு நான் பயப்படமாட்டேன் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை நவ்னீத் ரானா தாக்கினார்.
அமராவதி மக்களை தொகுதி உறுப்பினர் நவ்னீத் ரானாவும், அவருடைய கணவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ரானாவும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் கீர்த்தனைகள் பாட போவதாக தெரிவித்தனர். ஆனால் திட்டத்தை பின்னர் கைவிட்டு விட்டனர். இருப்பினும் அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏப்ரல் 23ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றம் பெயில் வழங்கியதையடுத்து மே 5ம் தேதி ரானா தம்பதியினர் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற எம்.பி. நவ்னீத் ரானா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அதிகாரத்தை ஒரு பெண்ணுக்கு எதிராக தவறாக பயன்படுத்தினார். அவரிடமிருந்து (உத்தவ் தாக்கரே) அதிகாரம் போய் விட்டதும், உங்கள் மனைவி ராஷ்மியை போல் உங்கள் வீட்டிலிருந்து யாராவது சிறையில் அடைக்கப்பட்டால், உங்கள் மனைவி எந்த குற்றமும் செய்யாமல் அங்கு இருப்பதை பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்பேன். அவர் கூட்டங்களில் தன்னை இந்துத்துவாதி என்று கூறுகிறார். ஒரு நம்பிக்கைவாதியின் வீட்டுக்கு வெளியே ஹனுமன் கீர்த்தனைகளை படிப்பது வகுப்புவாத முரண்பாட்டை உருவாக்காது. வேறு மதத்தினரின் வீட்டுக்கு வெளியே செய்தால் அது வெறுப்பு. நான் எந்த வெறுப்பையும் உருவாக்கவில்லை.
நான் இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண். ஹனுமன் கீர்த்தனைகளை பாடியதற்காக நான் சிறையில் இருப்பேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்க முடியாது. நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை இரவு முழுவதும் சிறையில் இருந்தேன், நான் நின்று கொண்டே இருந்தேன். அவர்கள் எனக்கு ஒரு பாயோ அல்லது தண்ணீரோ கொடுக்கவில்லை. அவர்களுக்கு அந்த அளவுக்கு மனிதாபிமானம் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. நான் சிறையில் இருந்தபோது, என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. அம்மா ஏன் சிறையில் இருந்தார்கள் என்று என் குழந்தைகள் கேட்டால் யார் பதில் சொல்வார்கள்? ஹனுமன் கீர்த்தனைகள் தான் எனக்கு பலம் கொடுத்தது. தினமும் படிக்கிறேன். சிறையில் உள்ள பெண்கள் அதை என்னுடன் படித்து என்னை ஊக்கப்படுத்தினர். என்னை அவ்வளவு எளிதில் யாராலும் வீழ்த்த முடியாது. நான் ஒரு போராளி. தன் வாழ்நாள் முழுவதும் உழைக்காமல் வேறொருவரின் பெயரை பயன்படுத்தி பதவியில் இருப்பவருக்கு நான் பயப்படவில்லை.
நான் எனது சொந்த தகுதியில் இங்கு இருக்கிறேன். இந்தியா மற்றும் மகாராஷ்டிராவின் மக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு நான் சேவை செய்வேன். நான் எதிர்காலத்தை பற்றி யோசித்து நேரத்தை வீணாக்குவதில்லை. நிகழ்காலத்தில் மட்டுமே வேலை செய்கிறேன். நான் அவரிடம் (உத்தவ் தாக்கரே) சொல்கிறேன், போட்டியிடுங்கள், நான் உங்கள் முன் நிற்பேன். அவர் முதல்வராக விரும்பினால், அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளாக அவர் தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை. 2014 மோடி அலை மற்றும் 2019 மோடி சுனாமியின் போது நான் பா.ஜ.க.வுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டேன். எனது மாவட்டம் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது. எனக்கு ஒரு தனிப்பட்ட பார்வை உள்ளது. இந்துத்துவாதி கட்சியுடன் (பா.ஜ.க.) இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இந்துஸ்தானில் வாழ்ந்தால், நீங்கள் இந்துத்துவாதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.