தேர்தல் வந்தால் ராகுல் காந்தி பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பார் என முழு நாட்டுக்கும் தெரியும்.. பா.ஜ.க.

 
ராகுல் காந்தி

தேர்தல் வரும்போது ராகுல் காந்தி பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பார் என்பதை குஜராத் மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் நன்றாகவே தெரியும் என்று மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயார் வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் சார்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி மக்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.  ராகுல் காந்தி கூறியதாவது:  குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும்.

வீடுகளுக்கு இலவச மின்சாரம்

 கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.  3,000 ஆங்கில வழிப் பள்ளிகளைத் திறந்து, பெண்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவோம்.   பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு  ரூ. 5 மானியம் வழங்கப்படும்.  தற்போது 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  500 ரூபாய்க்கு வழங்கப்படும். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.  

காங்கிரஸ் எப்போதுமே தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.. அவர்களால் அரசியல் மட்டுமே செய்ய முடியும்.. நரோட்டம் மிஸ்ரா

குஜராத் மக்களுக்கு ராகுல் காந்தி வாக்குறுதி அளித்ததை, மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கிண்டல் செய்தார். நரோட்டம் மிஸ்ரா டிவிட்டரில், தேர்தல் வரும்போது ராகுல் காந்தி பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பார் என்பதை குஜராத் மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் நன்றாகவே தெரியும். மத்திய பிரதேச தேர்தலிலும், விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களை 10 நாட்களில் தள்ளுபடி செய்வதாக ராகுல் ஜி பொய் வாக்குறுதி அளித்தார் என பதிவு செய்து இருந்தார்.