பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு.. குஜராத்தின் படிதர் சமுதாய தலைவர் நரேஷ் படேல் எந்த கட்சியில் சேருகிறார்?

 
நரேஷ் படேல்

குஜராத்தில் படிதர் சமுதாய தலைவர் நரேஷ் படேல் எந்த கட்சியில் சேருவார் என்பதை இன்று அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் மொத்த மக்கள் தொகையில் 11 முதல் 12 சதவீதம் பேர் படிதர் சமுதாயத்தினர். பல தொகுதிகளில் இந்த சமுதாயத்தின் வாக்குகள் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. படிதர் சமூகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர் நரேஷ் படேல். இவரை தங்கள் கட்சியில் இணைத்து கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் முயற்சி கொண்டு வருகின்றன. இந்நிலையில் இவர் காங்கிரஸில் இணையபோவதாக தகவல் வெளியானது. 

பிரசாந்த் கிஷோர்

ஆனால் இது குறித்து காங்கிரஸ் எந்தவித கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நரேஷ் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை டெல்லியில் சந்தித்து பேசினேன். எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக ஏதாவது ஒரு கட்சியில் சேருவேன். ஸ்ரீ கோடல்தான் கோயில் அறக்கட்டளை நடத்தும் மக்கள் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் எந்த அரசியல் கட்சியில் சேருவது என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பேன். 

காங்கிரஸ்

ஏப்ரல் 25ம் (இன்று) தேதியன்று கூட்டத்தை நடத்த உள்ளேன். அதன் பிறகு எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மூன்று கட்சிகளின் (காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி) தலைவர்கள் என்னை சந்தித்தனர். ஆனால் நான் எங்கே, எப்போது சேருவேன் என்பதுதான் கேள்வி. நான் தௌிவுக்காக காத்திருக்கிறேன். நான் உங்களுக்கு தெரிவிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.