பா.ஜ.க. தலைவர்கள் மாநிலத்தில் உள்ள அனைத்தையும் கொள்ளையடித்து குஜராத்துக்கு கொடுக்கின்றனர்... நானோ படோல்

 
பா.ஜ.க.

குஜராத்தில் வேதாந்தா-பாக்ஸ்கான் ஆலை தொடங்க இருப்பதை குறிப்பிட்டு, மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர்கள் மாநிலத்தில் உள்ள அனைத்தையும் கொள்ளையடித்து குஜராத்துக்கு கொடுக்கின்றனர் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானோ படோல் குற்றம் சாட்டினார்.

வேதாந்தா குழுமம் பாக்ஸ்கானுடன் இணைந்து குஜராத்தில் செமிகண்டக்டர் சிப் மற்றும் மின்னணு சாதனங்களுக்கான திரை தயாரிப்பு ஆலையை தொடங்க உள்ளது.  இதற்காக  கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. குஜராத்தில், வேதாந்தா-பாக்ஸ்கான் நிறுவனங்கள் குஜராத்தில் செமிகண்டக்டர் சிப் ஆலையை நிறுவ இருப்பது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் அரசுடன் வேதாந்தா-பாக்ஸ்கான் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஏனென்றால்,  வேதாந்தா குழுமம்  முதலில் இந்த ஆலையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள்  குறித்து மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பல்வேறு காரணங்களால் குஜராத்தை அந்நிறுவனங்கள் தேர்வு செய்தன. இந்நிலையில், வேதாந்தா குழுமம்-பாக்ஸ்கான் ஆலை திட்டம் மகாராஷ்டிராவுக்கு வராமல் போனதை குறிப்பிட்டு ஆளும் கட்சியான சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

நானா படோல்

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறுகையில், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் மாநிலத்தில் உள்ள அனைத்தையும் கொள்ளையடித்து குஜராத்துக்கு கொடுக்கின்றனர். மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர்கள் மாநிலத்தை கொள்ளையடித்து  டெல்லியில் உள்ள தங்கள் தலைவர்களின் ஆசியை பெற குஜராத்துக்கு கொடுக்கிறார்கள். சென்ற நிறுவனம் (குஜராத்தில் ஆலையை தொடங்கும் வேதாந்தா-பாக்ஸ்கான்) ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கும். அவர்கள் (பா.ஜ.க.) மும்பையை கூட குஜராத்துக்கு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தெரிவித்தார்.