சசிகலா பாஜகவில் சேர்ந்தால் நாங்கள் வளர உதவியாக இருக்கும் - நயினார் நாகேந்திரன்
அதிமுகவில் சசிகலாவை சேர்த்தால் அதிமுக வலுப்பெறும், அதிமுகவில் சசிகலாவை சேர்க்க விருப்பம் இல்லை என்றால் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் அது எங்களுக்கு வளர உதவியாக இருக்கும் அதற்கான முயற்சியை நாங்கள் எடுப்போம் என சட்டமன்ற பாஜக தலைவர் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டைக்கு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும், அதிமுகவில் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பாஜகவில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும், இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வில்லை என்று திமுக கூறியது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது. இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராகவில்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.
ஒன்றிய அரசு என்று கூறுவதை திமுகவினர் பெருமையாக கருதுகின்றனர் திமுக தங்களை பெருமை படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர மக்கள் பிரச்சினையை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.