"மேயர் தேர்தல் பேரம்.. கிளி ஜோசியம்" - வாக்களிக்க வந்த இடத்தில் சீறிய சீமான்!

 
சீமான்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வந்து ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்களும் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலப்பாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நகராட்சி அமைப்புகளின் தலைவர்களை மறைமுக தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இது பேரம் பேச வழிவகுக்கிறது. இதுவும் கிளி ஜோசியம் போலதான். சுயேச்சை வேட்பாளர்களை பேரம் பேசும் நிகழ்வு நடக்க உள்ளது. எவ்வளவு பணம் கொடுத்தாதவது, வேட்பாளராக சீட் பெறவேண்டும் என்றும், வாக்கிற்கு பணம் கொடுத்து வாக்கு பெற தயாராக உள்ளனர். மன்னன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி. 

ஒவ்வொரு முறையும் ஒதுக்கிய நிதி எங்கே? ஒவ்வொரு ஆண்டும் சாலை போடும் பணி நடைபெறுவது எந்த நாட்டில் இந்த வழக்கம் உள்ளது. பள்ளிக்கரனை ஏரியில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் இடமாக இருந்தது, ஆனால், குப்பையாகவும், பிளாஸ்டிக் கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் தான் உள்ளது. வாக்களிக்கும்போது நல்லவர்கள் யார் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும், நல்லவர்களுக்கு வாக்களித்தால் நன்மை நமக்கு, அயோக்கியர்களுக்கு வாக்களித்தால் அவர்களுக்கு மட்டுமே நன்மை. வாக்களிக்காமல் இருப்பது தேசிய குற்றம்'' என்றார்.