சசிகலாவின் பிடியில் இருக்கிறார் என் தம்பி.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. புயலை கிளப்பும் தீபா

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்பதை ஆறுமுகசாமி ஆணையம் உறுதி செய்திருக்கிறது. அவரின் மரணத்தில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தவும் அரசு முடிவெடுத்திருக்கிறது.
இந்த குற்றச்சாட்டுகளை சசிகலாவும் அவரது தரப்பினரும் மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்கிறார். ஆறுமுகம் சாமி ஆணையம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறுதிப்படுத்தி இருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக தெரிவித்து இருக்கிறார் தீபா தம்பி தீபக்.
தனது தம்பி சசிகலாவின் பிடியில் இருப்பதால்தான் இப்படி ஒரு காரியத்தை செய்து இருக்கிறார் என்கிறார் தீபா. இது தொடர்பாக தீபா வெளியீட்டிற்கும் ஆடியோவில், என் சொந்த தம்பியை எனக்கு எதிராக மாற்றி அவர்கள் கைக்குள் வைத்துள்ளார்கள். ஆடம்பர வாழ்க்கையையும் சுகபோக வாழ்க்கையையும் அனுபவிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகத் தான் சசிகலா, என் அத்தை கூட இருந்தாங்க. அதோடு அரசியல் பவர். அந்த அரசியல் பவர் வேணுங்கிற எண்ணத்தோடு அத்தை கூட இருந்தாங்க.
இதையெல்லாம் தீபக் மறுத்து பேசி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சசிகலாவின் பின்னணியில் அவர்களுடைய கைப்பிடியில் இருந்து கொண்டு தான் இப்படி பேசுகிறார் தீபக் . 67 நாள் நான் கூடவே இருந்தேன் என்று தீபக் சொல்லியிருக்கிறார். அப்படி 67 நாள் கூடவே இருந்த அவர் அப்போது எந்த தகவலையும் வெளியே சொல்லவில்லையே செய்தியாளர்களின் சந்திக்கவில்லை. அத்தையின் வாரிசு என்று தீபக் சொல்லியிருக்கிறார் அப்படி என்றால் நான் யார்?
அவருக்கு முன்னால் பிறந்த நானும் வாரிசு தானே? இரண்டு வாரிசுகள் இருக்கும்போது ஒருவரை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டு இன்னொருவரை வெளியே நிறுத்தி வைத்தது என்ன நியாயம்?
சசிகலா குடும்பத்தினர் எந்த தவறும் செய்யவில்லை என்றால், அப்பல்லோவில் நேர்மையான சிகிச்சை தான் நடந்தது என்று சொன்னால், என்னை வெளியே நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? இந்த கேள்விக்கு அன்று முதல் இன்று வரைக்கும் உண்மை தெரியவில்லை.
எந்த விவரமும் தெரியாத, சசிகலா என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போடுகிற தீபத்தை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டு, நன்கு விவரம் தெரிந்த, மெடிக்கல் பற்றி நன்கு அறிந்த என்னை வெளியே வைத்து விட்டு எந்த தகவலையும் சொல்லாமல் மறைத்தது ஏன்? அத்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க விடாமல் எனக்கு உள்ள உரிமையையும் பறித்தது ஏன்? இதன் மூலம் பெரிய துரோகத்தை அத்தைக்கு செய்து இருக்கிறார் சசிகலா.
வாரிசுகளான தீபா -தீபக் இரண்டு பேரும் இருக்கும்போது தீபக் மட்டும் வேண்டும். தீபா வேண்டாம் என்று அத்தை சொன்னதாக சசிகலா சொல்லி இருக்கிறார் . இப்படி யாராவது சொல்வார்களா? அத்தைக்கு என்னை பிடிக்காது. அதனால்தான் அனுமதிக்கவில்லை என்று சசிகலா ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். சரி பிடிக்காது என்றே வைத்துக் கொள்வோம்.
கிரிட்டிக்கலான நிலையில் வெண்டிலேட்டரில் வைத்திருக்கின்ற ஒருவரை பார்க்க அனுமதிப்பதில் என்ன சிரமம்? அப்படி இருக்கிற ஒருவர் எப்படி இன்னார் தான் வர வேண்டும் இன்னார் வரக்கூடாது என்று சொல்லி இருக்க முடியும். அதிமுக அமைச்சர்களோ சட்டமன்ற உறுப்பினர்களோ மற்ற தலைவர்களும் கூட யாரும் அத்தையை சந்திக்க முடியவில்லை. சசிகலா குடும்பத்தினர் கொடுத்த தகவல்களைத் தான் கேட்டுக் கொண்டார்கள். வெளியே வந்து சொன்னார்கள்.
தீபக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள தக்க கூடியவை அல்ல . எங்கள் அப்பா ஜெயக்குமார், அம்மா விஜயலட்சுமி, அத்தை ஜெயலலிதா, அக்கா தீபா ஆகிய தீபத்தின் சொந்த குடும்பமாகிய எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு கேடு செய்துவிட்டு யாரோ ஒரு சசிகலா சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு நடப்பது சரியல்ல . சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் விதமாக தீபக் பேசுவது சரியல்ல . அத்தையின் மரணத்தில் எந்த விதமான சந்தேகம் இருந்தாலும் அவர் எந்தவிதமாக பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருந்தாலும் சூழ்ச்சிகள் இருந்தால் அதை வெளிச்சமாக நாடு தெரிந்து கொள்ள வேண்டும். வாரிசான எனக்கும் அதில் இருக்கும் உண்மை தெரிய வேண்டும் . இந்த விசாரணையை யார் தடுத்தாலும் தமிழக அரசு இதை கையில் எடுத்துக் கொண்டு நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.