மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்ட குரங்கு! சசிகலா சொன்ன கதை!

 
sa

 மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்ட குரங்கின் கதையைச் சொல்லி தனது பொறுமைக்கும்,  காத்திருப்புக்குமான காரணத்தை ஆதரவாளர்களே விளக்கிப் பேசியுள்ளார் சசிகலா.

 அதிமுகவை காப்பாற்ற சரியான நேரம் வந்துவிட்டது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறார் சசிகலா.  தஞ்சாவூரில் நடந்த திருமண விழாவிலும் அவர் இதையே தெரிவித்திருக்கிறார்.  மேலும் தான் உடனடியாக அதிமுகவிற்கு அதிரடியாக வராமல் பொறுமையுடன் காத்திருப்பதற்கான காரணத்தையும் ஒரு கதை சொல்லி ஆதரவாளர்களுக்கு விளக்கி இருக்கிறார்.

 தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு தாலுகாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்ற அவ்விழாவில் அவர் பேசிய போது,   ’’இந்த விழாவிற்கு வந்திருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று காட்ட வேண்டும் என ஏங்கி தவிக்கும் நல் உள்ளங்களுக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்... அதிமுக எத்தனையோ உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவான இயக்கம்.  எதிர்க்கட்சிகள் எத்தனை கணக்கு போட்டாலும் நான் இருக்கும் வரைக்கும் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.  இதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் ’’என்று தெரிவித்திருக்கிறார்.

ssa

 தொடர்ந்து அது குறித்து பேசிய சசிகலா,   ‘’ இந்த இயக்கம் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறது.  புரட்சித் தலைவரின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட சோதனை காலம்தான் புரட்சித்தலைவியின் மறைவுக்கு பின்னரும் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.   அன்றைக்கு எப்படி கழகம் மீண்டும் எழுந்து வந்ததோ அதேபோல் தற்போது உன்னத நிலையை அடையும்.   கடைக்கோடி தொண்டன் நிமிர்ந்தால்தான் கழகம் என்பதை எந்த நாளும் மறந்து விடாதீர்கள்.  இந்த உன்னத நிலையை அடைவதற்கு நானே காரணமாக இருப்பேன்.  அதுவரைக்கும் ஓயமாட்டேன்.  இதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறியிருக்கிறார்.

மேலும்,  ‘’ கழகத்தை காப்பாற்ற சரியான நேரம் வந்துவிட்டது.  அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து இந்த பேரியக்கத்தை காப்பேன்.  அதுவரைக்கும் பொறுமையை கடைபிடியுங்கள்.   கண்டிப்பாக உங்களை புகழ் வந்தடையும்.   அதற்கு ஒரு கதை சொல்கிறேன்.   குரங்கு ஒன்று மாங்கொட்டையை உடைத்து வைத்து மரம் உருவாகும் என்று நினைத்த கதை ஒன்று இருக்கிறது.   மாம்பழம் சாப்பிடலாம் என்று ஆசைப்பட்டு தினந்தோறும் மாங்கொட்டையை எடுத்து பார்த்து வந்தது அந்த குரங்கு.   ஆனால் குரங்கின் ஆசைப்படி விதையிலிருந்து நேரடியாக மாமரம் வளரவில்லை.   குரங்கின் ஆசை நியாயம் என்றாலும் அந்த குரங்கின் அவசர புத்தி நியாயமானது அல்ல.   ஏனென்றால் காலம் என்கிற விதை இல்லாமல் எந்த செயலும் நிறைவேறுவது இல்லை.   விதை ஊன்றி,  நீரூற்றி சில காலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.   நமது செயல் வெற்றி பெற வேண்டும் என்றால் பொறுமையுடன் கூடிய முயற்சிகள் வேண்டும்’’ என்று தனது ஆதரவாளர்களுக்கு தனது பொறுமைக்கான காரணத்தை குரங்கு மாம்பழம் கதையின் மூலம் விளக்கி சொன்னார்.