பா.ஜ.க. தலைவர்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் சீட் கொடுக்காததற்கு நான் தான் காரணம்.. பிரதமர் மோடி

 
மோடி

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க.வின் பல எம்.பி. மற்றும் தலைவர்களின் வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததற்கு நான் தான் பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் அம்பேத்கர் பவனில் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், பா.ஜ.க.வில் வம்ச (குடும்ப வாரிசு) அரசியலுக்கு இடமில்லை. குடும்பம் தலைமையிலான அரசியல் கட்சிகளுக்கு சவால்கள் தொடரும். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சீட்டு கேட்டனர், ஆனால் அவர்களில் பலருக்கு மறுக்கப்பட்டது. 

பா.ஜ.க.

குழந்தைகளுக்கு (வாரிசுகளுக்கு) சீட்டு வழங்காததற்கு முழு பொறுப்பும் என்னையே சாரும். வம்ச அரசியல் அதிகரிப்பதால், ஜாதி வெறிக்கு வழி வகுக்கும். பா.ஜ.க. வம்ச அரசியலை எதிர்த்து போராடுகிறது. எனவே கட்சி முன்மாதிரியாக இருப்பது முக்கியம் என தெரிவித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தனர். அந்த கூட்டத்தில் 4 மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்ததற்காக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்களை பிரதமர் மோடி பாராட்டினார்.

பா.ஜ.க. தொண்டர்கள்

இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வினர் தங்களது வாரிசுகள் அல்லது உறவினர்களுக்காக தேர்தலில் போட்டியிட கட்சியிடம் வாய்ப்பு கேட்க கூடாது என்பதை பிரதமர் மோடி அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரில் ஆகிய 4 மாநிலங்களிலும் ஹோலி பண்டிகைக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என தகவல்.