சிறையில் கஷ்டபடாதீங்க.. ஊழலில் ஈடுபட்டவர்களின் பெயர் சொல்லுங்க பார்த்தா.. மிதுன் சக்ரவர்த்தி வேண்டுகோள்

 
பார்த்தா சட்டர்ஜி

சிறையில் ஏன் கஷ்டப்பட வேண்டும்? ஆசிரியர் பணி நியமன ஊழலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிடுங்க என்று இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜிக்கு பா.ஜ.க.வின் மிதுன் சக்ரவர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அம்மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர். மேலும் அடுத்த நாளில் அர்பிதா முகர்ஜியின் 2வது அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.28 கோடி மதிப்புள்ள ரொக்க பணம் மற்றும் 5 கிலோ எடையுள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகளை அமலாக்கத்துறை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்பிதா முகர்ஜி

அர்பிதா முகர்ஜி விசாரணையின் போது என்னிடம் உள்ள அனைத்து பணமும் பார்த்தா சட்டர்ஜிக்கு சொந்தமானது என்று அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மேற்கு வங்க அமைச்சா பார்த்தா சட்டர்ஜிக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த ஊழலில் ஈடுபட்டவர்களின பெயர்களை வெளியிடுமாறு பா.ஜ.க.வின் பார்த்தா சட்டர்ஜியிடம் மிதுன் சக்ரவர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிதுன் சக்ரவர்த்தி

பா.ஜ.க.வின் மிதுன் சக்ரவர்த்தி இது தொடர்பாக கூறியதாவது: பார்த்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன ஊழலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். எல்லா பணத்தையும் பார்த்தா சட்டர்ஜி வைத்திருப்பதாக நான் நம்பவில்லை. பார்த்தா சட்டர்ஜி வேறொருவருக்கு  சொந்தமான பணத்தின் பாதுகாவலராக இருந்திருக்க வேண்டும். அவர் இப்போது பேச வேண்டும். சிறையில் ஏன் கஷ்டப்பட வேண்டும்?.இவ்வாறு அவர் தெரிவித்தார்.