ஆற்காடு வீராசாமி பற்றி தவறான கருத்து.. பகிரங்க மன்னிப்புக் கேட்ட அண்ணாமலை..
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான கருத்தை தெரிவித்ததற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை தெரிவித்தார். அவர் பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது. அண்ணாமலையின் கருத்துக்களால் திமுகவினரிடையே பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அண்ணாமலையின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனும், திமுக எம்.பியுமான கலாநிதி வீராசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆர்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்” என்று பதிவிட்டிருந்தார்.
அதனைக் குறிப்பிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோரியுள்ளார். இதுகுறுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன். நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.