அமைச்சர்கள் எல்லாம் அண்ணாமலையை பார்த்து பயந்து நடுங்குகிறார்கள் -சசிகலா புஷ்பா பரபரப்பு

 
sap

தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் அண்ணாமலையை பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார் தமிழக பாஜக துணைத்தலைவர் சசிகலா புஷ்பா.  

 அதிமுகவின் முன்னாள் எம்பியும்,  தற்போதைய பாஜகவின் மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசினார் .   அப்போது பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சி குறித்து விளக்கி பேசினார்.

பின்னர் அவர் திமுகவின் ஊழல் குறித்தும், அண்ணாமலை குறித்தும் பேசினார்.   தமிழக பாஜக தலைவராக இருக்கின்ற அண்ணாமலையை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும்.   இளம்வயதிலேயே காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை  அந்த பதவியை துறந்து அரசியலுக்கு வந்து இருக்கிறார் .   காவல் பணியில் இருந்து விலகி மக்கள் பணியை ஆற்ற வந்திருக்கிறார்.

pu

 தமிழகத்தில் இன்று ஒவ்வொரு அமைச்சரும் அண்ணாமலை பார்த்து பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார்கள்.   திமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் அதிகப்படியான ஊழல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.   இதையெல்லாம் அண்ணாமலையின் கவனத்திற்கு வந்திருக்கிறது.   ஒரு ஆண்டிற்கு இத்தனை ஆயிரம் கோடி சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் திமுக அமைச்சர்கள் இலக்காக இருக்கிறது.   மற்றபடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் அவர்கள் நிறைவேற்றத் தவறி விட்டார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

 தொடர்ந்து பேசிய சசிகலா புஷ்பா,   நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை தடை செய்வோம் என்று சொன்னார்கள்.  ஆனால் இன்று டாஸ்மாக்கை திறந்து அதற்கு போலீஸ் காவல் போட்டிருக்கிறது திமுக ஆட்சி.   திமுகவால் டாஸ்மாக்கை இன்னும் மூட முடியவில்லை .  அதிமுக ஆட்சி நடக்கும் போது கனிமொழி எம்பி மது ஆலைகளால் பல பெண்கள் விதவையாகி விட்டனர் என்று சொன்னார்.  தற்போது மட்டும் அவர்கள் ஆட்சியில் என்ன செய்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். 

 திமுகவினர் தற்போது திருட்டு மணலை அள்ள  தொடங்கிவிட்டார்கள் .  அதிமுகவை குறை சொன்னவர்கள் எல்லாம் குவாரியை திறந்து திருட்டுத்தனமாக மணல் அள்ள தொடங்கிவிட்டார்கள்.   தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் திமுகவிற்கு சிறந்த எதிர்க்கட்சியாக இருந்துகொண்டிருக்கிறது பாஜகதான் என்றார்.