அடாவடி அமைச்சர்! ‘தலைகீழாக கட்டி தொங்கவிடுவேன்..’

 
au

உன்னை தலைகீழாக கட்டி தொங்க விடுவேன் என்று அதிகாரியை அமைச்சர் செல்ஃபோனில் மிரட்டி இருக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி இருக்கிறது .  ஆனால் இது குறித்து அமைச்சர் இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை.   அந்த அதிகாரியும் இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. 

 மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.   கடமையை செய்ய தவறும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம் மாநில முதல்வர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.  

r

 சமீபத்தில் அவர் ஒரு அரசு விழாவில் சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார். இப்படி அதிரடி நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க,   முதல்வரின் உத்தரவுக்கு முரணான சம்பவம் அம் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது .  

மத்திய பிரதேச மாநில அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த ராம்கேலாவன் படேல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இணை அமைச்சராக உள்ளார்.  இவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருக்கிறது.   அந்த ஆடியோவில் ,  என்னுடைய தொகுதியான அமர் பதானில் இருக்கும் கடைகளில் கலப்பட உணவு தொடர்பான எந்த சோதனைகளையும் நடத்தக் கூடாது.  வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது.  இதை மீறினால் உன்னை தலைகீழாக கட்டித் தொங்க விடுவேன் என்று அமைச்சர்,  அதிகாரியை மிரட்டும்படி அந்த ஆடியோ உள்ளது.

 இந்த ஆடியோவில் உள்ளது தன் குரல் தானா? இல்லையா? என்பது குறித்து அமைச்சர் வாய் திறக்கவில்லை.  அந்த அதிகாரியும்  இதுவரைக்கும் வாய் திறக்காமல் மௌனமாகவே இருந்து வருகிறார்.  இது மத்திய பிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.