படித்த முட்டாள்; மட்டமான அரசியல்வாதி அண்ணமலை - செந்தில் பாலாஜி
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் இந்த ஓராண்டில் ரூ. 198 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை தொடர்ந்து சாலை பணிகள், நகர் நல மையம் கட்டுதல், மேல்நிலை தொட்டி கட்டும் உள்ளிட்ட ரூ. 38.6 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன. விடுபட்ட சாலை பணிகளுக்காக மாநகராட்சி சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. சிலர் விளம்பரத்துக்காக அரசியல் செய்து வருகிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் முதல்வரின் சீரிய முயற்சியால் 143 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு குறைந்த விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்படவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் எவ்வளவு டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது என அண்ணாமலையிடம் கேட்டு சொல்லுங்கள். சிலர் விளம்பரத்துக்காக அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கும், வேலை வெட்டி இல்லாதவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீர வசனம் பேசும் அண்ணாமலை அரவக்குறிச்சியில் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அது எங்கிருந்து வந்தது. காவல் துறையில் பணியில் இருந்து பணத்தை சேர்த்தா? அல்லது ஆடு மேய்த்து வந்த பணத்தையோ வாக்காளர்களுக்கு கொடுத்தார். இருப்பினும் அங்கு மண்ணை கவ்வினார் மக்கள் விரட்டி அடித்தார்கள்.
காவல்துறையை விட்டு சேவை செய்யவா அரசியலுக்கு வந்தார். நேர்மையான அதிகாரி போல் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். தமிழகத்தில் மட்டமான அரசியல் செய்யும் படித்த முட்டாள் அண்ணாமலை. ஒருபோதும் பாஜகவினரின் கனவு பலிக்காது. நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் அவர்கள். தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இருந்த சூழலிலும் தடையில்லா மின்சாரத்தை கொடுத்து வந்தோம். மேலும் எதற்காக குஜராத்தில் பாஜக தொழிற்சாலையில் மின்வெட்டை அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் அறிவிக்கும் 39 வேட்பாளர்களும் மகத்தான வெற்றி பெறுவார்கள். நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் நமது முதல்வர் ஸ்டாலின் இருப்பார்” எனக் கூறினார்.