ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க.வின் ஆய்வகமாக மாறியுள்ளது... மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

 
பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க.வின் ஆய்வமாக மாறியுள்ளது, இங்கு சோதனை நடத்தி, பிற இடங்களில் அதனை செயல்படுத்துகின்றனர் என்று மெகபூபா முப்தி குற்றம் சாட்டினார்.

ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியலில் புதிதாக 25 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அடுத்து நடைபெற உள்ள தேர்தலில் அங்கு வசிக்கும் வெளிமாநிலத்தவர்களும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அங்கு வாக்களிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர் எனவும் யூனியன் பிரதேச தலைமை  தேர்தல் அதிகாரி ஹிருதேஷ் குமார் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேர்தலில் அங்கு வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் வாக்களிப்பதற்கு சில கட்சிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க.வின் ஆய்வகமாக மாறியுள்ளது. இங்கு சோதனை நடத்தி, பிற இடங்களில் அதனை செயல்படுத்துகின்றனர். 

பா.ஜ.க.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைப்பு என்று அழைக்கப்படுவதன் போர்வையில் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன. பா.ஜ.க. ஆட்சியின்கீழ், ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் நாம் கண்டது போல் சில சமயங்களில் தேர்தலின்போதும், சில சமயங்களில் தேர்தலுக்கு பின்னரும் தேர்தல் மோசடிகள் செய்யப்படுகின்றன. அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகள் இது போன்ற மோசடிகளை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. அமலாக்கத்துறை இப்போது பா.ஜ.க.வின் கூட்டணி கூட்டாளியாக உள்ளது. உள்ளூர் அல்லாதவர்கள் அடுத்த ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்காளர்கள் பா.ஜ.க. வாக்காளர்கள். 

தேர்தல்

பா.ஜ.க.வுக்கு ஒரே குறிக்கோள் மட்டுமே உள்ளது, எல்லா இடங்களிலும் ஆட்சி அமைப்பது, எந்த வழியை கையாண்டும் ஆட்சி அமைப்பது. ஒரு மோசடி தேர்தலை பயன்படுத்தி இங்கு (ஜம்மு காஷ்மீர்) ஒரு பாசிச ஆட்சியை நிறுவன விரும்புகிறார்கள். தேர்தல் ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணி இது. ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம் இந்தியாவை தேர்ந்தெடுத்தது, அவர்கள் மதச்சார்பற்ற இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினர். ஆனால் மக்கள் வாக்களிப்பதில் நம்பிக்கை இழந்து விட்டனர். அனைத்தும் பா.ஜ.க.வின் நலனுக்காக நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.