ஞானவாபி மசூதி விவகாரம்.. சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது... மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

 
பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

ஞானவாபி மசூதி விவகாரத்தை குறிப்பிட்டு, சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது என மெகபூபா முப்தி குற்றம் சாட்டினார்.

ஞானவாபி மசூதியில், நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த சனிக்கிழமையன்று வீடியோ அளவிடும் பணி தொடங்கியது. இந்த பணி நேற்றோடு முடிவடைந்தது. ஞானவாபி மசூதியில் அளவிடும் பணியின் போது சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஞானவாபி மசூதி விவகாரத்தில் பா.ஜ.க.வை மெகபூபா முப்தி கடுமையாக தாக்கினார். இது தொடர்பாக ஜம்மு அண்ட் காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கூறியதாவது: 

ஞானவாபி மசூதி

சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தை தீர்க்கும் பட்சத்தில், அவர்கள் (பா.ஜ.க.) மசூதிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும். (அவுரங்கசீப் ஆட்சியின் போது கோயில்கள் அழிக்கப்பட்டது என்ற விவாதம் குறித்த கருத்துக்கு) இந்தியாவில் 50 சதவீத சுற்றுலா முகலாயர்களால்தான் காரணம். இந்தியாவில் சுற்றுலாத் துறையை அழிக்க பா.ஜ.க. விரும்புகிறது. 

தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் போஸ்டர்

(சமீபத்தில் காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து) தி காஷ்மீர் பைல்ஸ் படம் வெளியான பிறகு இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பு அதிகரித்துள்ளது. அவர்கள் (பா.ஜ.க.) உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப இந்து-முஸ்லிம் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். இப்போது ஞானவாபி மசூதி பின் வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.