மத்திய அரசு காஷ்மீரில் தனது இந்துத்துவா செயல் திட்டத்தை பிரச்சாரம் செய்கிறது.. மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
பள்ளி குழந்தைகள் இந்து கீதங்களை பாடும் வீடியோ ஷேர் செய்து, மத்திய அரசு காஷ்மீரில் தனது இந்துத்துவா செயல் திட்டத்தை பிரச்சாரம் செய்கிறது என்று மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவியுமான மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரு வீடியோவை ஷேர் செய்து, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு காஷ்மீரில் தனது இந்துத்துவா செயல் திட்டத்தை பிரச்சாரம் செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். 105 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், முதலில் தெற்கு காஷ்மீரின் குல்காமில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியின் பலகையை காட்டுகிறது. அதற்கு முன் பள்ளி சீருடையில் சுமார் 2 டஜன் மாணவா்கள் ஆசிரியர்கள் குழுவின் முன்னிலையில் கூப்பிய கைகளுடன் பாடலை பாடுவதை காட்டுகிறது.
மெகபூபா முப்தி அந்த டிவிட்டில், மத அறிஞர்களை சிறையில் அடைப்பது, ஜமா மசூதியை மூடுவது, பள்ளிக் குழந்தைகளை இந்து கீதங்களை பாடச் செய்வது காஷ்மீரில் இந்திய அரசின் உண்மையான இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துகிறது. இந்த வெறித்தனமான கட்டளைகளை மறுத்தால், பி.எஸ்.ஏ. மற்றும் யு.ஏ.பி.ஏ. சட்டங்கள் பாயும். இதற்கு நாங்கள் செலுத்தும் விலை, மாறும் ஜம்மு அண்ட் காஷ்மீர் என பதிவு செய்து இருந்தார்.
மெகபூபா முப்தியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தவைலர்களில் ஒருவரான கவிந்தர் குப்தா கூறுகையில், மெகபூபா முப்தி எல்லாவற்றையும் சர்ச்சையாக்க முயற்சிக்கிறார். காஷ்மீரில் உள்ள ஒரு பள்ளியில் பாடப்படும் ரகுபதி ரவாக் ராஜா என்ற பஜனை குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். இந்த பஜனையில் ஈஸ்வர் அல்லா தேரோ நாம், சப்கோ தே பகவான் என்றும் உள்ளது. மெகபூபா முப்திக்கு இந்த சம்மதம் கிடைக்கட்டும் என தெரிவித்தார்.