"மதவாத" பாஜகவை முறியடிக்க... முதல்வர் ஸ்டாலினுக்கு காஷ்மீரிலிருந்து வந்த சப்போர்ட்!

 
ஸ்டாலின்

குடியரசு தினத்தன்று ஜனவரி 26ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாடு முழுவதும் சமூகநிதிக் கொள்கையை முன்னெடுத்து பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டு நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும்” என அறிவித்தார். மேலும் இதில் இணையுமாறு அகில இந்திய அளவில் 38 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு கடிதம் ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பினார்.

அதில், "தனித்தன்மைமிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆன நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியது அல்ல. மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்” என தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஒரே மேடையில் மோடி, ஈபிஎஸ், ஓபிஎஸ் | TheNEWSLite

ஸ்டாலினின் கோரிக்கையை அதிமுக நிராகரித்தது. அரசியல் ஆதாயத்திற்காக சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கியதால் தாங்கள் இணைய விரும்பவில்லை என ஓபிஎஸ் 7 பக்க கடிதம் எழுதியிருந்தார். சுருக்கமாக சொன்னால் கூட்டமைப்பு பாஜகவிற்கு எதிராக இருப்பதால் இணைய விரும்பவில்ல்லை என்பதை சுற்றி சுற்றி எழுதியிருந்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி கூட்டமைப்புக்கு ஆதரவு அளித்தது. அக்கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சிபிஐ பொதுச்செயலாளர் ராஜா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் ஸ்டாலினுக்கு ஆதரவளித்துள்ளனர். அந்த வகையில் தற்போது காஷ்மீரிலுள்ள  மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தியும் சமூகநீதி கூட்டமைப்புக்கு மக்கள் ஜனநாயக் கட்சி முழு ஒத்துழைப்பினை தரும்  எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள பதிவில், "பாஜகவின் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் செயல்திட்டத்தை முறியடிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதற்கு முழு ஆதரவு கொடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.