நீங்கள் டெல்லியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்துகிறீர்கள்... அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய மீனாட்சி லேகி

 
மீனாட்சி லேகி

சுகேஷ் சந்திரசேகரின் புதிய கடிதத்தை குறிப்பிட்டு, நீங்கள் டெல்லியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்துகிறீர்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மீனாட்சி லேகி குற்றம் சாட்டினார்.

பணமோசடி வழக்கில் டெல்லி திஹார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் அண்மையில் டெல்லி துணைநிலை கவர்னருக்கு எழுதிய கடிதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சுகேஷ் சந்திரசேகர் எழுதிய புதிய கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.500  கோடி வசூலிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டதாகவும், சத்யேந்தர் ஜெயின் தன்னை மிரட்டியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். சுகேஷ் சந்திரசேகரின் குற்றச்சாட்டை குறிப்பிட்டு ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சத்யேந்தர் ஜெயினையும் பா.ஜ.க. கடுமையாக தாக்கியது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வெளியறவுத் துறை இணையமைச்சருமான மீனாட்சி லேகி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கெஜ்ரிவால் என்ன செய்துள்ளார்? நீங்கள் ஊழல்களில் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் டெல்லியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்துகிறீர்கள். இதைத்தான் டெல்லியில் செய்தீர்கள். டெல்லியில் யமுனை மாசுபட்டுள்ளது. உங்கள் கட்சி டெல்லியில் மோசடி செய்கிறது. உங்கள் கட்சி அமைச்சர் சிறையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்துகிறார். சத்யேந்தர் ஜெயின் சிறையில் இருந்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்துகிறார். அவரிடம் மொபைல் போன் உள்ளது. அதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பர் ஏகே2 என பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சத்யேந்தர்  ஜெயின்

கடத்தல் தொலைப்பேசிகளை பயன்படுத்தி சிறையிலிருந்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை மாபியாக்கள் நடத்துகிறார்கள் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த வழக்கில் சிறையில் இருக்கும் அமைச்சர் மிரட்டி பணம் பறிக்கும் மோசடியை நடத்துகிறார். இதை விசாரிக்க வேண்டும். சத்யேந்திர ஜெயினை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும், இதன் மூலம் நியாயமான விசாரணை நடைபெறுவது உறுதி செய்ய முடியும். சுகேஷ் பா.ஜ.க.வில் சேரவில்லை. உண்மையில் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக்கப்பட்டார். ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். எனவே பணம் பெற்றவர்கள் மீதுதான் ஆதாரம் காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.