அடுத்து யார் என்று எங்களுக்கு தெரியாது.. சிசோடியா ஜி ஜெயில் கையேட்டை நன்றாக படியுங்க.. மீனாட்சி லேகி சூசகம்

 
மீனாட்சி லேகி

ஆம் ஆத்மி தலைவர்களில் அடுத்து யார் சிறைக்கு செல்வார் என்று எங்களுக்கு தெரியாது, சிசோடியா ஜி ஜெயில் கையேட்டை நன்றாக படிக்க வேண்டும் என்று மீனாட்சி லேகி தெரிவித்தார். அடுத்து சிசோடியா சிறைக்கு செல்வார் என்பதை மீனாட்சி லேகி சூசகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணமோசடி குற்றச்சாட்டு காரணமாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில்  சிறைக்குள் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறையில் தனக்கு முறையான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், இதனால் 28 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் விசாரணை நீதிமன்றத்தில் சத்யேந்தர் ஜெயின் குற்றம் சாட்டினார். இந்த சூழ்நிலையில், சிறைக்குள் பல உணவு வகைகள், பழங்கள் மற்றும் சூப் போன்றவை வரவழைத்து சத்யேந்தர் ஜெயின் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை மேற்கோள் காட்டி ஆம் ஆத்மியை பா.ஜ.க. கடுமையாக தாக்கியுள்ளது. மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மீனாட்சி லேகி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: அவர்களின் பாவங்கள் மதுபான ஊழலாக இருந்தாலும் சரி அல்லது பள்ளிகளில் நடந்த முறைகேடுகளாக இருந்தாலும் சரி, யமுனையை அழுக்காக்கி விட்டது.  

சிறையில் சத்யேந்தர் ஜெயின்

ஆம் ஆத்மி தலைவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) டெல்லியை பற்றி கவலைப்படவில்லை. அவர் அதை தனது பிரதமர் ஆக வேண்டும் என்ற லட்சியங்களுக்கு நிதியளிப்பதற்கான ஒரு ஆதாரமாக மட்டுமே கருதுகிறார். நீங்கள் பொது வாழ்க்கையில் இருக்கும்போது, உங்கள் நடத்தையில் கொஞ்சம் நிதானமும், கண்ணியமும் இருக்க வேண்டும். இவர்களுக்கு ( ஆம் ஆத்மி தலைவர்கள்) அவை இல்லை. இதற்கு மிகப்பெரயி உதாரணம் சத்யேந்தர் ஜெயின் சிறையில் நடந்து கொண்டது. இவர்கள் அரசியல்வாதிகளுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துபவர்கள். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் அமைச்சருக்கு (சத்யேந்தர் ஜெயின்) மசாஜ் செய்வதை பார்த்து நான் வெறுப்படைந்தேன். இவர்கள் (ஆம் ஆத்மி தலைவர்கள்) எதையாவது சொல்வார்கள் ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மாறாக செயல்படுபவர்கள். 

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நான் எவ்வளவு நேர்மையானவன், சரியானவர்கள் என்று தனக்கான சான்றிதழ்களை அவரே வழங்குவதில் மும்முரமாக இருக்கிறார். கள யதார்த்தம் முற்றிலும் வேறுபட்டது. இவர்கள் ஊழல் செயல்களில் ஈடுபடுபவர்கள், பின்னர் சிறைக்குள் உள்ள வசதிகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். சிறைக்குள் சொகுசு வசதிகளை ஏற்பாடு செய்யும் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது நமக்கு தெரியாது. (சத்யேந்தர் ஜெயின் மசாஜ் பெறும் வீடியோவை காட்டி) சிறைக்குள் உங்களுக்கு பணியாளர்கள் கிடைக்குமா?, இது அவருக்கு வீட்டு பணியாளர் கிடைத்தது போல் தெரிகிறது. சிசோடியா ஜி ஜெயில் கையேட்டை சரியாக படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அடுத்து யார் விருந்தோம்பலை அனுபவிப்பார்கள் என்று எங்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.