சொந்த கட்சியை ஒழுங்காக வைக்கமுடியவில்லை, என் கட்சியை விமர்சனம் செய்கிறார்.. ராகுலுக்கு பதிலடி கொடுத்த மாயாவதி

 
புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

சொந்த கட்சியை ஒழுங்காக வைக்க முடியவில்லை ஆனால் என் கட்சியை விமர்சனம் செய்கிறார் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மாயாவதி ஜி தேர்தலில் போட்டியிடவில்லை. நாங்கள் கூட்டணி அமைக்க தகவல் அனுப்பினோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. கன்ஷிராம் ஜி உத்தர பிரதேசத்தில் தலித்துகளுக்காக குரல் எழுப்பினார். அது காங்கிரஸை பாதித்தது. சி.பி.ஐ., அமலாக்கத் இயக்குனரகம் மற்றும் பெகாசஸ் இருப்பதால் இந்த முறை தலித் குரல்களுக்காக மாயாவதி போட்டியிடவில்லை என விமர்சனம் செய்து இருந்தார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் கருத்துக்கு மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது: தனது சொந்த கட்சியை ஒழுங்காக வைக்க முடியாது ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியை விமர்சனம் செய்கிறார். ராகுல் காந்தி கூறியது முற்றிலும் தவறானது. இந்த அற்ப விஷயங்களை காட்டிலும் உத்தர பிரதேச தேர்தல் தோல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது போன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் காங்கிரஸ் 100 முறை யோசிக்க வேண்டும். அவர்களால் பா.ஜ.க.வை  ஜெயிக்க முடியவில்லை. ஆனால் இந்த விமர்சனங்களை செய்து கொண்டே இருக்கிறார்கள். 

காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி எதுவும் செய்யவில்லை. முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான மறைந்த ராஜீவ் காந்தி கூட எனது பகுஜன் சமாஜ் கட்சியை அவதூறு செய்ய முயன்றார். இப்போது பிரியங்கா காந்தி கூட அமலாக்க இயக்குனரகம் மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளுக்கு நான் பயப்படுகிறேன் என்று கூறி அதையே செய்கிறார். இவை அனைத்தும் உண்மை இல்லை. இந்த பிரச்சினைகள் அனைத்தையும் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் போராடி வென்றுள்ளோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.