குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு நான்கு கிலோ மீட்டருக்கும் ஒரு அற்புதமான அரசுப் பள்ளி.. மணிஷ் சிசோடியா
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஓர் ஆண்டுக்குள் அகமதாபாத் உள்பட 8 நகரங்களில் ஒவ்வொரு நான்கு கிலோ மீட்டருக்கும் ஒரு அரசு பள்ளி கட்டப்படும் என மணிஷ் சிசோடியா வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்வருமா மணிஷ் சிசோடியா அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராத் மக்கள் தங்கள் குழந்தைகளுக்காக பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். மேலும் பள்ளிகளை கட்டும் கட்சியை தேர்ந்தெடுப்பார்கள். அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்தி, பள்ளிகளை கட்டுபவர்களை சிறையில் அடைப்பவர்களை தேர்ந்தெடுக்கமாட்டார்கள். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அகமதாபாத், சூரத், வதோதரா, ஜாம்நகர், ராஜ்கோட், பாவ்நகர், காந்தி நகர் மற்றும் ஜூனாகத் ஆகிய 8 நகரங்களில் ஒவ்வொரு நான்கு கிலோ மீட்டருக்கும் ஒரு அரசு பள்ளி கட்டப்படும்.
ஒரு ஆண்டுக்குள் இந்த எட்டு நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளை காட்டிலும் சிறந்ததாக ஒவ்வொரு நான்கு கிலோ மீட்டருக்கும் ஒரு அற்புதமான அரசுப் பள்ளியை உருவாக்குவோம். ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளின் கணக்கெடுப்பை நடத்தி, அவற்றின் நிலையை மேம்படுத்தும் திட்டத்தை வகுத்தது. குஜராத் பட்ஜெட்டையும் ஆய்வு செய்துள்ளோம். 27 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பள்ளிகளில் எந்த பணியும் நடைபெறவில்லை என்பதை மக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். 44 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்வதையும், இந்த மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி நிறுவனங்களின் மீது புகார் கூறுவதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
அவர்கள் (தனியார் பள்ளிகள்) தங்கள் விருப்பப்படி கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டார்கள். மேலும் 53 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு செல்கிறார்கள். குஜராத்தில் உள்ள ஒரு கோடி மாணவர்களின் எதிர்காலம் மோசமாக உள்ளது. குஜராத்தில் 18 ஆயிரம் பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை. அரசின் பட்ஜெட்டில் கல்விக்கு முன்னுரிமை இல்லை. ஆசிரியர்கள் இல்லை, ஆசிரியர் உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த உத்தரவாதத்தின்படி, குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்த ஒரு ஆண்டுக்குள் இந்த காலியிடங்கள் அனைத்தும் நிரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.