கெஜ்ரிவால் நிறைய செய்தார்... காஷ்மீர் பண்டிட்களுக்கு 8 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?.. மணிஷ் சிசோடியா

 
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

மத்தியில் 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசு காஷ்மீர் பண்டிட்களுக்கு என்ன செய்தது என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கேள்வி எழுப்பினார். 

1990ன் தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். பண்டிட் சமூகத்தினர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு,  தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.

பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் பண்டிட்கள் மீண்டும் காஷ்மீருக்கு செல்ல ஒரு வாய்ப்பை விரும்புகிறார்கள். பா.ஜ.க. எட்டு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. காஷ்மீர் பண்டிட்களுக்கு அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) என்ன செய்தார்கள்?. தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்காக பா.ஜ.க. கவலைப்படுகிறது. ஆனால் காஷ்மீர் பண்டிட்களுக்காக அல்ல.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காஷ்மீர் பண்டிட்களுக்காக நிறைய செய்துள்ளார். ஆவணங்கள் இல்லாத நிலையிலும் 223 ஆசிரியர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நிரந்தர அந்தஸ்து வழங்கினார். நெறிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய முறை, டெல்லியில் உள்ள காஷ்மீர் பண்டிட்களுக்கு தலா மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.