அனைவராலும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட ஒரு நல்ல முடிவு... மணிப்பூர் முதல்வராக மீண்டும் பிரேன் சிங் தேர்வு.. நிர்மலா சீதாராமன்

 
நிர்மலா சீதாராமன்

மணிப்பூர் முதல்வராக மீண்டும் பிரேன் சிங் அனைவராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 32ல் வெற்றி பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. ஆனால் முதல்வர் யார் என்பதில் குழப்பம் நிலவியது. தற்போதைய காபந்து முதல்வர் பிரேன் சிங்குக்கும், பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிஸ்வஜித் சிங்குக்கும் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவியதாக கூறப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் 2 முறை டெல்லி சென்று தலைமை சந்தித்து பேசினர். இதனால் பரபரப்பு நிலவியது.

பா.ஜ.க.

இந்நிலையில் மணிப்பூர் சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கட்சி தலைமை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூம் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக பா.ஜ.க.வின் மாநில சட்டப்பேரவை தலைவராக பிரேன் சிங்கை தேர்ந்தெடுத்தனர். 

பிரேன் சிங்

மணிப்பூர் முதல்வராக மீண்டும் என்.பிரேன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இது அனைவராலும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட ஒரு நல்ல முடிவு. மணிப்பூரில் ஒரு நிலையான மற்றும் பொறுப்பான அரசாங்கம் இருப்பதை இது உறுதி செய்யும். இது மேலும் கட்டமைக்கப்படும், ஏனெனில் பிரதமர் மோடியின் தலைமையில் இன்று மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்தார்.