திரிபுராவின் புதிய முதல்வர் மாணிக் சாஹா.. கட்சியை விட்டு விலகுவதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மிரட்டல்

 
மாணிக் சாஹா

திரிபுராவின் புதிய முதல்வராக பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி. மாணிக் சாஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திரிபுராவில்  பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம், முதல்வர் பதவியை பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்தார். திரிபுரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு பிப்லப் குமார் தேப் செய்தியாளர்களிடம் பேசுகையைில், 2023ல் தேர்தல் வரப்போகிறது. இங்கு ஒரு பொறுப்பான அமைப்பாளர் பொறுப்பேற்க வேண்டும் என கட்சி விரும்புகிறது. அமைப்பு வலுவாக இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும். தேர்தலுக்கு பிறகு, வெளிப்படையாக யாரேனும் முதல்வராக வருவார்கள் என தெரிவித்தார்.

பிப்லப் குமார் தேப்

பிப்லப் குமார் தேப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அடுத்த சில மணி நேரங்களில், புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பா.ஜ.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திரிபுரா பா.ஜ.க. தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மாணிக் சாஹா புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சரும், கட்சியின் மத்திய பார்வையாளருமான பூபேந்தர் யாதவ் டிவிட்டரில், திரிபுராவில் பா.ஜ.க.வின் சட்டப்பேரவை கட்சி தலைவராக சாஹா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சாஹா மற்றும் பிற மூத்த கட்சி தலைவர்கள் ஆதரவு கடிதத்தை வழங்கினர் என பதிவு செய்து இருந்தார்.

பா.ஜ.க.

அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவதற்கு சாஹாவுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலமே உள்ளது. அதேசமயம், பா.ஜ.க. கட்சிக்குள் உட்கட்சி மோதல் தற்போது வெளியாகியுள்ளது. பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தின் போது, சூர்யாமி நகர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம் பிரசாத் பால், சஹா கட்சியை நடத்த தகுதியற்றவர்  என்பதால் நான் கட்சியை விட்டு விலகுகிறேன் என மிரட்டியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக பா.ஜ.க. தரப்பில் இருந்து எந்த தகவலும் உடனடியாக வெளிவரவில்லை.