பா.ஜ.க.வின் சிறையை உடைத்து 2024ல் மக்கள் ஆட்சியை கொண்டு வர வேண்டும்... மக்களிடம் மம்தா வேண்டுகோள்

 
பா.ஜ.க.

பா.ஜ.க.வின் சிறையை உடைத்து 2024ல் மக்கள் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று மேற்கு வங்க மக்களிடம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் எஸ்பிளனேடில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மெகா தியாகிகள் தின பேரணியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வின் சிறையை உடைத்து 2024ல் மக்கள் ஆட்சியை கொண்டு வர வேண்டும். தகுதியான அனைவருக்கும் வேலை வழங்கப்படுவதை உறுதி செய்வோம். 

மம்தா பானர்ஜி

நாங்கள் எப்பொழுதும் எங்கள் இளைஞர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். மேலும் வரும் நாட்களிலும், வேலைவாய்ப்பை பொறுத்தவரை, யாரும் பின்வாங்கமால் இருப்பதை உறுதி செய்வோம். கன்யாஸ்ரீ, சபூஜ் சதி, கிரிஷக் பந்து  போன்ற நடவடிக்கைகளின் பலன்கள் அவர்கள் (மேற்கு வங்க மக்கள்) தொடர்ந்து பெறுவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் இருக்கும் வரை மக்கள் நலன் புறக்கணிக்கப்படாது. 

காங்கிரஸ்

மத்தியில் ஆளும் கட்சி (பா.ஜ.க.) நாட்டின் அமைப்புகளை அழித்தது. 2024ல் மக்கள் ஆணையால் பா.ஜ.க. ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தப்படும். அவர்கள் (பா.ஜ.க.) தோற்கடிக்கப்படுவார்கள். பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறாது என்று உறுதியாக சொல்ல முடியும், அது நடந்தவுடன் மற்றவர்கள் ஒன்றிணைந்து அடுத்த ஆட்சியை அமைப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.