சிவ சேனா விவகாரம்... உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம்.. பா.ஜ.க.வை எச்சரித்த மம்தா பானர்ஜி

 
மம்தா

சிவ சேனா விவகாரத்தை குறிப்பிட்டு, உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம் என பா.ஜ.க.வை மம்தா பானர்ஜி எச்சரிக்கை செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் செல்வாக்கு மிக்க தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அந்த கட்சியை சேர்ந்த சுமார்  42 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் இல்லையென்றால் சிவ சேனா பிளவு ஏற்படும் என கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதா எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 

கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்

இந்நிலையில், உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம் என பா.ஜ.க.வை மம்தா பானர்ஜி எச்சரிக்கை செய்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: மகாராஷ்டிரா அரசை நெறிமுறையற்ற முறையில் கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்களை (சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள்) மேற்கு வங்கத்துக்கு அனுப்புங்கள். அவர்களுக்கு நல்ல விருந்தோம்பல் செய்வோம். உத்தவ் தாக்கரே மற்றும் அனைவருக்கும் நீதி வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 

பா.ஜ.க.

இன்று நீங்கள் (பா.ஜ.க.) அதிகாரத்தில் இருக்கிறீர்கள் மற்றும் பணம், தசை மற்றும் மாபியா பலத்தை பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒருநாள் நீங்கள் செல்ல வேண்டும். உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம். இது தவறானது, நான் அதை ஆதரிக்கவில்லை. அசாமில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடையூறு விளைவிக்க மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்கள் அந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.