மஹூவா விவகாரம்.. வேலை செய்யும் போது நாம் தவறு செய்கிறோம் ஆனால் அவற்றை சரி செய்ய முடியும்.. மம்தா
வேலை செய்யும் போது நாம் தவறு செய்கிறோம். ஆனால் அவற்றை சரி செய்ய முடியும் என்று எனது கட்சி எம்.பி. மஹூவா மொய்த்ராவுக்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குரல் கொடுத்துள்ளார்.
லீனா மணிமேகலை என்ற இயக்குனரின் காளி என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த போஸ்டரில், காளி போல் வேடமணிந்த ஒரு பெண் தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (எல்.ஜி.பி.டி.) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில மணிநேரங்களிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேசமயம் அந்த போஸ்டருக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியது. காளி போஸ்டர் தொடர்பாக மஹூவா மொய்த்ரா கூறியதாவது: இந்து மதத்திற்குள், காளி வழிபாட்டாளராக இருப்பதால் எனது காளியை அப்படி கற்பனை செய்ய எனக்கு சுதந்திரம் உள்ளது.
அதுவே எனது சுதந்திரம், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது என்று நினைக்கிறேன். உங்கள் கடவுளை நீங்கள் எவ்வளவு வணங்க வேண்டுமோ அதே அளவுக்கு எனக்கு சுதந்திரம் இருக்கு. என்னை பொறுத்தவரை காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். நீங்கள் தாராபித் (மேற்கு வங்கம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய சக்தி பீடம்) சென்றால் சாதுக்கள் புகைப்பிடிப்பதை காணலாம். அது காளியை மக்கள் (அங்கு) வழிபடும் முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனையடுத்து, மஹூவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. போர்க்கொடி தூக்கியது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மஹூவா மொய்த்ராவின் கருத்தை கட்சி அங்கீகரிக்கவில்லை என்றும், இது போன்ற கருத்துக்களை திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையாக கண்டிக்கிறது என்று தெரிவித்து இருந்தது. இருப்பினும், தனது கட்சி தன்னை கை விட்ட போதிலும், மஹூவா மொய்த்ரா தன் மீதான விமர்சனங்களுக்கு துணிந்து பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மஹூவா மொய்த்ராவுக்கு மறைமுகமாக ஆதரவு குரல் கொடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாணவர்களுக்கான கிரெடிட் கார்ட் விநியோக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: வேலை செய்யும் போது நாம் தவறு செய்கிறோம். ஆனால் அவற்றை சரி செய்ய முடியும். சிலர் நல்ல வேலைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் திடீரென்று கூச்சலிடுகிறார்கள். எதிர்மறையானது மூளையின் செல்களை பாதிக்கிறது. அதனால் நேர்மறையாக சிந்திப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.