பார்த்தா சட்டர்ஜி விவகாரம்.. நான் ஊழலையோ அல்லது எந்த தவறான செயலையும் ஆதரிக்கவில்லை- மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

நான் ஊழலையோ அல்லது எந்த தவறான செயலையும் ஆதரிக்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

2016ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வி துறையில் 13 ஆயிரம் ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நியமனத்தில் சில ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அப்போது கல்வித்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜியிடம் கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பெரிய அளவில் பணப் பரிமாற்ற மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது.

பார்த்தா சட்டர்ஜி

கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி வீடு, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இதில் பல கோடி ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை கைது செய்தபிறகு பார்த்தா சட்டர்ஜி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 4 முறை போன் செய்ததாகவும், ஆனால் மம்தா போனை எடுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை

இந்த சூழ்நிலையில், பார்த்தா சட்டர்ஜி விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மவுனத்தை கலைத்தார். மம்தா பானர்ஜி கூறியதாவது: நான் ஊழலையோ அல்லது எந்த தவறான செயலையும் ஆதரிக்கவில்லை. யாராவது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் அல்லது அவள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் எனக்கு எதிரான தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை நான் கண்டிக்கிறேன். ஏஜென்சிகளை (விசாரணை அமைப்புகள்) பயன்படுத்தி எனது கட்சியை உடைக்க முடியும் என்று நினைத்தால் அது தவறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.