என் ரத்தத்தை கொடுக்க தயாராக உள்ளேன், ஆனால் மாநிலத்தை பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.. மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

என் ரத்தத்தை கொடுக்க தயாராக உள்ளேன் ஆனோல் மாநிலத்தை பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க பா.ஜ.க. எம்.பி. ஜான் பர்லா கடந்த ஆண்டு, வடக்கு மேற்குவங்க மாவட்டங்களை உள்ளடக்கிய யூனியின் பிரதேசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அண்மையில் மேற்கு வங்க பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆனந்தமய் பர்மன் மற்றும் ஷிகா சட்டர்ஜி ஆகியோர் வடக்கு மேற்குவங்கத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வடக்கு வங்கத்தை தனி மாநிலம் கோரிய பா.ஜ.க.வை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்தார்.

பா.ஜ.க.

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவாரில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் பிரிவினைவாதத்தை பரப்ப பா.ஜ.க. முயல்கிறது. வடக்கு வங்கத்தில் அனைத்து சமூகங்களும் பல தசாப்தங்களாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தனி மாநில கோரிக்கையை பா.ஜ.க. பரப்புகிறது.

தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்திய மக்கள்

சில சமயங்களில் கூர்க்காலாந்து, மற்ற நேரங்களில் வடக்கு வங்கத்தின் தனி மாநிலம். எனது ரத்தத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் மாநிலத்தை பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். சிலர் (தனி மாநிலம் கோரும் தீவிரவாத அமைப்புகள்) என்னை மிரட்டுகிறார்கள். நான் கவலைப்படவில்லை. இது போன்ற மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.