உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க பா.ஜ.க. பல கோடி செலவிடுகிறது... மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு..

 
மம்தா

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க. பல கோடி செலவிடுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று இரவு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

உத்தவ் தாக்கரே

மேலும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து நாளை நம்பிக்கை வாக்கெடுக்கும்படி ஆளும் அரசுக்கு உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பா.ஜ.க.வை மம்தா குற்றம் சாட்டியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க. பல கோடி செலவிடுகிறது. 

பா.ஜ.க.

ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க அவர்களுக்கு (பா.ஜ.க.) இவ்வளவு பணம் எங்கு இருந்து வருகிறது?. நம் நாட்டின் ஜனநாயகம் எங்கே போகிறது?. நமது கூட்டாட்சி அமைப்பு பற்றி என்ன?. இந்த நாட்டில் உள்ள அனைத்தையும் புல்டோசர் செய்ய பா.ஜ.க. முடிவு செய்துள்ளதா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.