குடியரசு தலைவர் தேர்தலில் எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்.. பா.ஜ.க.வை எச்சரித்த மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

குடியரசு தலைவர் தேர்தலில் எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்று பா.ஜ.க.வை மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.


நம் நாட்டின் தற்போதைய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலையில் நிறைவடைய உள்ளது. இதனால் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன்-ஜூலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளர்தான் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

ராம் நாத் கோவிந்த்

சமீபத்தில் நடந்த உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல்களில் பஞ்சாபை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்த வெற்றி பா.ஜ.க.வினருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் குடியரசு தலைவர் தேர்தல் பா.ஜ.க.வுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என தெரிகிறது. ஏனென்றால் குடியரசு தலைவர் தேர்தலில் எங்க தயவு உங்களுக்கு (பா.ஜ.க.) தேவை என்று  மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

பா.ஜ.க.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சட்டப்பேரவையின் உள்ளே பேசுகையில், குடியரசு தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும். எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் (பா.ஜ.க.) வெற்றி பெற மாட்டீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதேசமயம் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டப்பேரவைகளில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி கிடையாது.