பா.ஜ.க.வின் உத்தரவுகளை மட்டுமே சி.பி.ஐ. பின்பற்றினால் நாங்கள் எதிர்க்க தயாராக இருக்கிறோம்... மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

பிரிபூம் வன்முறை வழக்கில், பா.ஜ.க.வின் உத்தரவுகளை மட்டுமே சி.பி.ஐ. பின்பற்றினால் நாங்கள் எதிர்க்க தயாராக இருக்கிறோம் என மேற்கு வங்க  முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.  

மேற்கு வங்க மாநிலம் பிரிபூமில் உள்ள ராம்பூர்ஹாட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்  திரிணாமுல் காங்கிரஸின் பிரபலமான தலைவரான பாது ஷேக் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக ஒரு கும்பல்அந்த பகுதியில் வீடுகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் உள்பட 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இது  தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்நிலையில், பிரிபூம் வன்முறை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும்படி சிறப்பு விசாரணை குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பிரிபூம் வன்முறை தொடர்பாக கூறியதாவது: இது (சி.பி.ஐ.விசாரிக்க உத்தரவு) ஒரு நல்ல முடிவு. ஆனால் அவர்கள் பா.ஜ.க.வின் உத்தரவுகளை மட்டுமே பின்பற்றினால் நாங்கள் எதிர்க்க தயாராக இருக்கிறோம்.  ராம்பூர்ஹாட் சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக நான் இன்னும் நினைக்கிறேன். ஒரு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் மற்றொரு கட்சிக்காரரால் கொல்லப்பட்டார். ஆனால் எங்கு பார்த்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் விமர்சிக்கப்படுகிறது. 

பா.ஜ.க.

இந்த விஷயத்தை விசாரிக்கவும், ராம்பூர்ஹாட் சம்பவத்தின் உண்மை காரணத்தை அறியவும் நாங்கள் (மேற்கு வங்க அரசு) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். உத்தர பிரதேசம்,  டெல்லி, கர்நாடகா, திரிபுரா மற்றும் அசாமில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது. அந்த மாநிலங்களில் சம்பவ இடத்துக்கு எங்கள் கட்சியினர் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பிர்பூமில் நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் தடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.