பி.எப். வட்டி குறைக்கும் முடிவு.. கருப்பு நடவடிக்கையை ஒன்றுபட்ட எதிர்ப்புகள் மூலம் முறியடிக்க வேண்டும்.. மம்தா

 
மம்தா பானர்ஜி

மத்திய அரசின் கருப்பு நடவடிக்கையை (பி.எப். வட்டி குறைக்கும் முடிவு) ஒன்றுபட்ட எதிர்ப்புகள் மூலம் முறியடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

நடப்பு 2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.)  முடிவெடுத்துள்ளது. இது 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். இதற்கு முன்பு கடந்த 1977-78ம் நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன மேலும் அந்த முடிவை மறுஆய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்தின. 

இ.பி.எப்.ஓ.

இந்நிலையில், பி.எப். வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி என்று தெரிவித்தார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி டிவிட்டரில், உத்தர பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்கு பிறகு, பா.ஜ.க. அரசு உடனடியாக அதன் பரிசு அட்டையுடன் வெளிவருகிறது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்க முன்மொழிவதன் மூலம் அது ஒருமுறை தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது.

பா.ஜ.க.

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கை, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கங்களின் இழப்பில் பெரும் தொழிலதிபர்களின் நலன்களை வலியுத்தும் தற்போதைய மத்திய ஸ்தாபனத்தின் கொச்சையான முறையில் திசை திருப்பப்பட்ட பொதுக் கொள்கைகளை அம்பலப்படுத்துகிறது. இந்த கருப்பு நடவடிக்கையை (பி.எப். வட்டி குறைக்கும் முடிவு) ஒன்றுபட்ட எதிர்ப்புகள் மூலம் முறியடிக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.