மக்கள் போராட நினைத்தால், மக்களின் கவனத்தை திசை திருப்ப மோடி அரசு ஒரு பிரச்சினையை கிளப்பும்.. மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட நினைத்தால், மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு ஒரு பிரச்சினையை கிளப்பும் என மோடி அரசை மம்தா பானர்ஜி தாக்கினார்.

மேற்கு வங்கத்தில் மேதினிபூர் கல்லூரி மைதானத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றுகையில் கூறியதாவது: எரிவாயு அல்லது எரிபொருளின் விலைகளை உயர்த்தும் போதெல்லாம், மத்திய அரசு வேண்டுமென்றே வகுப்புவாத பதட்டங்களை தூண்டுகிறது. இது முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் ஒரு பிரிவினை தந்திரமாக செயல்படுகிறது. 

சமையல் கியாஸ் சிலிண்டர்

ஒவ்வொரு முறையும் மக்கள் விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிடும்போது, மத்திய அரசு ஒரு பிரச்சினையை கிளப்பும், மோடி அரசு மக்களின் கவனத்தை திசை திருப்ப வகுப்புவாத கலவரங்களை உருவாக்க முயல்கிறது. உள்நாட்டு கேஸ், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சாமானியர்களை மத்திய அரசு சூறையாடுகிறது. சாமானிய மக்களின் கவனத்தை திசை திருப்ப, நரேந்திர மோடி அரசு வகுப்புவாத கலவரத்தில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடி

மத்திய அரசு மாநிலங்களில் இருந்து திரட்டும் பணத்தில் ஒரு பங்கை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வரியாக அளிக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, மத்திய அரசு எங்களுக்கு நியாயமான நிலுவைத் தொகையை வழங்கவில்லை என மம்தா பானர்ஜி அண்மையில் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.