எரிபொருள் விலையை உயர்த்தி ஏழைமக்களை கொள்ளையடிக்கிறது மத்திய அரசு... காங்கிரஸ்

 
பெட்ரோல்

எரிபொருள் விலை உயர்த்தி, ஏழை மக்களை கொள்ளையடித்து மோடி அரசு ரூ.10 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறது என மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மத்தியிலிருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விலை உயர்த்தப்படவில்லை. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக விலை உயர்த்தப்படவில்லை என கூறப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அரசு விலையை உயர்த்தும் என்று எதிர்க்கட்சிகள் கூறின. இந்நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டது.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

கடைசியாக 2021 நவம்பர் 2ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து இருந்தன. இந்நிலையில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், எரிபொருள் விலை உயர்த்தி, ஏழை மக்களை கொள்ளையடித்து மோடி அரசு ரூ.10 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறது. உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியால் விலைகள் உயர்ந்து வருவதாக பலர் கூறுகின்றனர். ஆனால் பெட்ரோலிய அமைச்சரின் கூற்றுப்படி, நாம் ரஷ்யாவிலிருந்து ஒரு சதவீத கச்சா எண்ணெய் கூட வாங்கவில்லை என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில், எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் விதிக்கப்பட்ட லாக்டவுன் நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் பணவீக்கத்தின் தொற்றுநோய் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பட்டால்,அவர் அனைவரையும் பாத்திரங்களை தட்ட சொல்வார் என்று பதிவு செய்துள்ளார்.