பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி நடக்கிறது.. மல்லிகார்ஜூன் கார்கே
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் யார் என்ற பிரச்சினையை எழுப்பி, பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி நடக்கிறது என மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் பேட்டி ஒன்றில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக பதவியேற்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு மல்லிகார்ஜூன் கார்கே பதிலளிக்கையில் கூறியதாவது: யார் என்ன ஆவார் என்பது பிரச்சினை அல்ல, அனைத்து கட்சிகளும் கட்சி தலைவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
பா.ஜ.க.வுக்கு எதிராக போராட வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் யார் என்ற பிரச்சினையை எழுப்பி, பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி நடக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் எழுப்பும்.
பெட்ரோல், டீசல் விலையை 10 நாட்களில் எட்டு ரூபாய்க்கு மேல் உயர்த்தி ஏழைகளின் பணத்தை மத்திய அரசு கொள்ளையடித்து வருகிறது. மேலும் உரங்களுக்கான மானியத்தையும் அரசு குறைத்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 2 வாரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.