காங்கிரஸ், சோனியா மற்றும் என்னையும் இழிவுப்படுத்த யாரோ பரப்பிய வதந்திதான் இது... மல்லிகார்ஜூன் கார்கே பகீர் தகவல்

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எனது பெயரை சோனியா காந்தி பரிந்துரைத்தார் என்பது எல்லாம் வதந்தி, காங்கிரஸ், சோனியா மற்றும் என்னையும் இழிவுப்படுத்த யாரோ பரப்பிய வதந்திதான் இது என்று மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் இம்மாதம் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. அந்த கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர், மல்லிகார்ஜூன் கார்கே ஆகிய இருவரும் மட்டுமே காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் உள்ளனர். அவர்கள் இருவரும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில் மல்லிகார்ஜூன் கார்கே உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். 

சோனியா காந்தி

உத்தர பிரதேசத்தில் மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எனது பெயரை சோனியா காந்தி பரிந்துரைத்தார் என்பது எல்லாம் வதந்தி, இதை நான் ஒரு போதும் சொல்லவில்லை. காந்தி குடும்பத்தை யாரும் தேர்தலில் பங்கேற்க மாட்டார்கள் அல்லது எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்று அவர் (சோனியா காந்தி) தெளிவாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தியையும், என்னையும் இழிவுப்படுத்துவதற்காக யாரோ இந்த வதந்தியை பரப்பியுள்ளனர். 

காங்கிரஸ்

கட்சி தேர்தல்களில் பங்கேற்க போவதில்லை என்றும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக வரமாட்டேன் என்றும் என்றும் சோனியா காந்தி தெளிவாக கூறிவிட்டார். கட்சியின் உறுப்பினர்கள் 9,300 பேர் கொண்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துள்ளனர், அவர்கள் வேட்பாளருக்கு வாக்களித்து பெரும்பான்மை உள்ளவர் தேர்ந்தெடுக்கப்படுவார். உத்தர பிரதேசத்தில் மொத்தம் 1,250 வாக்காளர்கள் உள்ளனர். எனக்கான வாய்ப்புகளை பார்க்க நான் இங்கு வரவில்லை, என்னை போட்டியிட சொன்ன பிரதிநிதிகளே எனது வெற்றிக்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.