மோடி ஜி உங்களுக்கு ராவணனை போல் 100 தலைகள் உள்ளதா?.. மல்லிகார்ஜூன் கார்கே கிண்டல்

 
மல்லிகார்ஜுன கார்கே

வேறு யாரையும் பார்க்க வேண்டாம், மோடியை பார்த்து ஒட்டு போடுங்கள் என்று மோடி பேசியதை குறிப்பிட்டு, உங்களுக்கு ராவணனை போல 100 தலைகள் உள்ளதா என்று பிரதமரை மல்லிகார்ஜூன் கிண்டல் செய்தார்.

குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி என மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. அதேசமயம் அங்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருந்து வருகிறது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

காங்கிரஸ்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் கூறியதாவது: மோடி ஜி பிரதமர். அவர் தனது வேலையை மறந்து மாநகராட்சி தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல் மற்றும் எம்.பி. தேர்தல் என எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்கிறார். எந்நேரமும் தன்னை பற்றியே பேசிக் கொண்டிருப்பார். வேறு யாரையும் பார்க்க வேண்டாம், மோடியை பார்த்து ஒட்டு போடுங்கள் என்று சொல்கிறார். 

மோடி

உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறை பார்க்கிறோம்? உங்களிடம் எத்தனை வடிவங்கள் உள்ளன? உங்களுக்கு ராவணனை போல 100 தலைகள் உள்ளதா?. நகராட்சி  தேர்தல், மாநகராட்சி தேர்தல் மற்றும் மாநில தேர்தல் என எதுவாக இருந்தாலும் மோடிஜியின் பெயரில் வாக்குகள் கேட்பதை நான் பார்த்து வருகிறேன். வேட்பாளர் பெயரில் வாக்கு கேளுங்கள். மாநகராட்சிக்கு மோடி வந்து வேலை செய்ய போகிறாரா? உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவர் உங்களுக்கு உதவ போகிறாரா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.