காங்கிரஸ் தலைவர் தேர்தல், பிரச்சாரத்தை தொடங்கிய மல்லிகார்ஜூன் கார்கே.. மூத்த தலைவர்கள் ஆதரவு..

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மல்லிகார்ஜூன் கார்கே  நேற்று தொடங்கினார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் 3 பேர் தங்களது செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று, அந்த கட்சியின் மூத்த  தலைவர்கள் சசி தரூர், மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் கே.என்.திரிபாதி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். இதில் கே.என். திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மல்லிகார்ஜூன் கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான  பிரச்சாரத்தை தொடங்கினார். 

கவுரவ் வல்லப்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கவுரவ் வல்லப், தீபேந்தர் எஸ் ஹூடா மற்றும் சையத் நசீர் ஹூசைன் ஆகியோர் தங்கள் செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தனர்.  நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தேர்தலில் போட்டியிட விரும்பாததால், எனது மூத்த சகாக்கள் என்னை தேர்தலில் போட்டியிட சொன்னார்கள். நான் யாருக்கும் எதிராக போராடவில்லை. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்திற்காக போராடுகிறேன். டாக்டர் தரூர் பேசி வரும் நிலை மற்றும்  மாற்றம் குறித்து பிரதிநிதிகள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும். ஒருவர் முடிவுகளை எடுக்க மாட்டார், அது கூட்டாக எடுக்கப்படும். 

பிரியங்கா, ராகுல்,சோனியா

மகாத்மா காந்தி மற்றும லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் (நேற்று) எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். எனது சித்தாந்தம் மற்றும் நெறிமுறைகளுக்காக நான் எப்போதும் போராடி வருகிறேன். பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவராகவும், அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்தேன். இப்போது மீண்டும் போராடி அதே நெறிமுறைகள் மற்றம் சித்தாந்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன். நான் தலித் தலைவராக மட்டும் போட்டியிடவில்லை, காங்கிரஸின் மூத்த தலைவராக போட்டியிடுகிறேன், தொடர்ந்து செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.