நான் நிம்மதியாக உணர்கிறேன்- முன்னாள் தலைவர் சோனியா.. எனக்கு உணர்ச்சிகரமான தருணம்- புதிய தலைவர் கார்கே..
காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விடுபட்டதால் நான் நிம்மதியாக உணர்கிறேன் என்று சோனியா காந்தியும், புதிய தலைவராக பொறுப்பேற்ற நிகழ்வு எனக்கு உணர்ச்சிகரமான தருணம் என்றும் மல்லிகார்ஜூன் கார்கேவும் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெற்றார். இதனையடுத்து காங்கிரஸின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸின் தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே பொறுப்பேற்றார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவராக எனது கடமையை என்னால் இயன்றவரை செய்தேன். இந்த பொறுப்பில் இருந்து விடுபட்டதால் நான் நிம்மதியாக உணர்கிறேன்.
மல்லிகார்ஜூன் கார்கேவின் தலைமையால் கட்சி உத்வேகம் பெற்று வலுப்பெறும் என்று நம்புகிறேன். புதிய கட்சி தலைவர் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், சாதாரண தொண்டராக இருந்து இவ்வளவு உயரத்துக்கு உயர்ந்திருப்பதும் எனது மிகப்பெரிய திருப்தியாக உள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மாற்றம்தான் உலகின் ஆட்சி. காங்கிரஸ் பல சவால்களை எதிர்கொள்கிறது, ஆனால் முழு பலத்துடன், ஒற்றுமையுடன், நாம் முன்னேறி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் கூறியதாவது: எனக்கு இது உணர்ச்சிகரமான தருணம். ஒரு தொழிலாளியின் மகனை, சாதாரண தொண்டனை கட்சியின் தலைவராக்கிய காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் அரசியல் வேடமிட்டு பொய் பிரச்சாரம் செய்வார்கள் என்றும், ஜனநாயக கொள்கைகளை கண்டிப்பாாகள் என்றும் யார் நினைத்தார்கள்?. அவர்களை தோற்கடிக்கப் போராடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.