மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, அவர்கள் முதல்வரை மாற்றினார்கள்... பா.ஜ.க.வை தாக்கிய கார்கே

 
மல்லிகார்ஜுன கார்கே

குஜராத் மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, அவர்கள் முதல்வரை மாற்றினார்கள் என்று பா.ஜ.க.வை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மல்லிகார்ஜூன் கார்கே கூறியதாவது: காங்கிரஸூக்கும்  எதிராகவும், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகவும் பா.ஜ.க. பொய் பிரச்சாரம் செய்வதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தேர்தல் குஜராத் மக்களின் தேர்தல். 

காங்கிரஸ்

இந்த தேர்தலில் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக முடிவெடுப்பதை இன்று அறிந்தேன்.  இது பா.ஜ.க.வுக்கு தெரியும். அதனால் தான் பா.ஜ.க. தலைவர்கள் வெவ்வேறு வார்டுகளில் வலம் வருகிறார்கள். ஆட்சிக்கு வந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும், பிரதமரும், உள்துறை அமைச்சரும், 5 முதல்வர்களும்  இங்கு வந்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் ஆத்திரமூட்டும் பேச்சுகளை வழங்கி வருகின்றனர். அதற்கு பின்னால் பயம் இருக்க வேண்டும். 

பா.ஜ.க.

மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, அவர்கள் (பா.ஜ.க.) முதல்வரை மாற்றினார்கள். ஆறு ஆண்டுகளில் மூன்று முதல்வர்கள் மாற்றப்பட்டனர். அதாவது அவர்கள் (பா.ஜ.க. அரசு) மாநிலத்தில் எந்த வேலையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி என மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.