இன்றைய நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்தவை அல்ல... நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் ஏக்நாத் ஷிண்டே

 
ஏக்நாத் ஷிண்டே

இன்றைய நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்தவை அல்ல என்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமயிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அரசு 164 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனையடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் கூறியதாவது: இன்றைய நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்தவை அல்ல. நான் தேர்தலுக்கு வந்தபோது, நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பதை நேரில் பார்த்தவர்கள் இந்த அவையில் உள்ளனர். நான் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டிருக்கிறேன். சுனில் பிரவும் (உத்தவ் தாக்கரே ஆதரவு சிவ சேனா எம்.எல்.ஏ.) ஒரு சாட்சி. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஷிண்டேவின் கீழ் பணியாற்ற விரும்பவில்லை என்று மகா விகாஸ் அகாடி அமைப்பதற்கு முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தன்னிடம் தெரிவித்ததாக உத்தவ் தாக்கரே என்னிடம் தெரிவித்தார். 

சரத் பவார்

ஆனால் மகா விகாஸ் அகாடி அரசு அமைந்த பிறகு, உங்கள் சொந்த கட்சியில் (சிவ சேனா) மோதல் நடந்ததாகவும், நீங்கள் முதல்வராக வருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்று என்னிடம் அஜித் பவார் தெரிவித்தார். பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி ஆடசியில் இருந்தபோது, எனக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனக்கு விரைவில் நல்ல பதவி கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என்னிடம் தெரிவித்தார். முந்தைய அரசில் அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு அளித்த தேவேந்திர பட்னாவிஸ் ஜிக்கு நன்றி கூறுகிறேன். சம்ருத்தி மஹாமார்க் திட்டத்தில் என்னால் பணியாற்ற முடியும். 2019ல் சிவ சேனாவுக்கும்  துணை முதல்வர் பதவியை அவர் வழங்க இருந்தார். 

தேவேந்திர பட்னாவிஸ்

நாங்கள் சிவ வீரர்கள், நாங்கள் எப்போதுமே பாலாசாகேப் மற்றும் ஆனந்த் திகே ஆகியோரின் சிவ வீரர்களாக இருப்போம். என் குடும்பத்தை தாக்கினார்கள். என் அப்பா உயிருடன் இருக்கிறார், என் அம்மா இறந்து விட்டார். என் பெற்றோருக்கு அதிக நேரம் கொடுக்க முடியவில்லை, நான் வரும் போது அவர்கள் தூங்கி விடுவார்கள், நான் தூங்கும்போது அவர்கள் வேலைக்கு செல்வார்கள். என்னால் என் மகன் ஸ்ரீகாந்துக்கு அதிக நேரம் கொடுக்க முடியவில்லை. என் இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன அந்த நேரத்தில் ஆனந்த் திகே என்னை ஆறுதல் படுத்தினார். நான் நினைத்தேன், வாழ என்ன இருக்கிறது? நான் என் குடும்பத்துடன் இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.