சனி மகாராஷ்டிராவை விட்டு வெளியேற வேண்டும்.. உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக தாக்கிய நவ்னீத் ரானா
சனி மகாராஷ்டிராவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சுயேட்சை எம்.பி. நவ்னீத் ரானா மறைமுகமாக தாக்கினார்.
சுயேட்சை எம்.பி. நவ்னீத் ரானா பல வாரங்களாக டெல்லியில் தங்கியிருந்து தான் சிறையில் இருந்தபோது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிடம் விளக்கம் அளித்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மகாராஷ்டிரா மாநிலம் அமராவதிக்கு திரும்பினார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மகாராஷ்டிராவை விட்டு சனி வெளியேற வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக நவ்னீத் ரானா தாக்கினார்.
நவ்னீத் ரானா நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவதுநான் டெல்லியில் ஹனுமன் கீர்த்தனைகளை படிப்பதை அமைதியான முறையில் நடத்தினேன். பாதுகாப்பும் இருந்தது. நான் எந்த பிரச்சினையும் சந்திக்கவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் ஹனுமன் கீர்த்தனைகளை படிப்பதில் சிக்கல் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இன்று சனிக்கிழமை மற்றும் சனி (துரதிர்ஷ்டம்/துன்பத்தையும் குறிக்கிறது) மகாராஷ்டிராவை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமராவதி மக்களை தொகுதி உறுப்பினர் நவ்னீத் ரானாவும், அவருடைய கணவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ரானாவும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் கீர்த்தனைகள் பாட போவதாக தெரிவித்தனர். ஆனால் திட்டத்தை பின்னர் கைவிட்டு விட்டனர். இருப்பினும் அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏப்ரல் 23ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றம் பெயில் வழங்கியதையடுத்து மே 5ம் தேதி ரானா தம்பதியினர் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.