ஒலி பெருக்கிகள் விவகாரம்.. சிவ சேனாவுக்கு குடைச்சல் கொடுக்கும் ராஜ் தாக்கரே கட்சி..

 
சிவ சேனா

மும்பையில் சிவ சேனா அலுவலகத்திற்கு வெளியே நேற்று எம்.என்.எஸ். கட்சியினர் வாகனத்தில் ஒலி பெருக்கி ஹனுமன் பாடல் உள்பட பிற மத பாடல்களை இசைக்க விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த வாரம் மகாராஷ்டிரா நவ்நிர்மான்  சேனா (எம்.என்.எஸ்.) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கட்சி கூட்டத்தில் பேசுகையில், நான் தொழுகைக்கு எதிரானவன் அல்ல, நீங்கள் உங்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்யலாம். ஆனால் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றுவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். நான் இப்போது எச்சரிக்கிறேன். ஒலிபெருக்கிகளை அகற்றவும் இல்லையேல் மசூதியின் முன் ஒலி பெருக்கிகளை வைத்து ஹனுமன் பாடல்களை இசைப்போம் என்று மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

ராஜ்தாக்கரே

அதற்கு அடுத்த நாளில் மும்பையில் காட்கோபரில் உள்ள மகாராஷ்டிரா நவ்நிர்மான்  சேனா கட்சி அலுவலகத்தில் ஒலி பெருக்கிகளை வைத்து ஹனுமான் பாடல்கள் சத்தமாக இசைக்கப்பட்டது. இதனையடுத்து அனுமதி இல்லாமல் ஒலிபெருக்கிகளை வைத்ததற்காக எம்.என்.எஸ். கட்சியின் மகேந்திர  பானுஷாலியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விடுவித்தனர். இந்நிலையில் நேற்று, மும்பையில் உள்ள சிவ சேனாவின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே, மகாராஷ்டிரா நவ்நிர்மான்  சேனா கட்சியினர் ஒரு வாகனத்தில் ஒலி பெருக்கி வைத்து ஹனுமன் பாடல்கள் உள்பட பிற மத பாடல்களை இசைத்தனர். 

போலீசார் பறிமுதல் செய்த கார்

உடனே போலீசார் பாடல்கள் ஒலிப்பதை நிறுத்தினர். மேலும் பாடல்களை இசைக்க பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் எம்.என்.எஸ். கட்சியின் யஷ்வந்த் கில்லேகரை கைது செய்தனர். அவரை சிவாஜி பார்க் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை அகற்றக் கோரி இதுபோன்ற நடவடிக்கைகளில் எம்.என்.எஸ். கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.இது முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆளும் கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.