மசூதிகளிலிருந்து ஒலி பெருக்கிகளை அகற்றுவதில் ராஜ் தாக்கரே தீவிரம்.. கட்சியிலிருந்து வெளியேறும் முஸ்லிம்கள்

 
மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, மசூதிகளிலிருந்து ஒலி பெருக்கிகளை அகற்ற தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால், அவரது கட்சியிலிருந்து பல முஸ்லிம் தலைவர்கள் வெளியேறி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் அண்மையில் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூட்டம் ஒன்றில் பேசுகையில், மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஹனுமான் பாடல்களை ஒலிபெருக்கிகளில் இசைப்போம். இது ஒரு சமூக பிரச்சினை, மதப் பிரச்சினை அல்ல. மாநில அரசுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள் என தெரிவித்தார்.

ராஜ்தாக்கரே

ராஜ் தாக்கரேவின் எச்சரிக்கை காரணமாக மகாராஷ்டிராவில் பரபரப்பு நிலவுகிறது. அதேவேளையில், மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்பதிலும், இந்து ஆதரவு நிலைப்பாட்டில் ராஜ் தாக்கரே உறுதியாக இருப்பதால், மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியிலிந்து லோக்கல் முஸ்லிம் தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் எம்.என்.எஸ். கட்சியின் மாநில செயலாளர் இர்பான் ஷேக் அந்த கட்சியிலிருந்து விலகினார்.

மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா

இந்நிலையில், மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியிலிருந்து அம்மாநிலம் முழுவதும் உள்ள 36 லோக்கல் தலைவர்கள் வெளியேறியுள்ளனர். கட்சியில் இருந்து ராஜினாமா செய்த தலைவர்கள் அனைவரும் மும்பை, மராத்தாவாடா மற்றும் மேற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறுவது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.