மதவாத சிந்தனையோடு பேசுவதை நிறுத்துங்கள் - அமித்ஷாவுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்..
எதிர்கட்சிகளை மதவாத சிந்தனையோடு விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நேற்று போராட்டம் நடத்தியது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி.க்கள் அனைவரும் கருப்பு உடையில் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளில் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி, குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் பிரியங்கா காந்தியை காவல்துறையினர் இழுத்துச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சரி செய்ய முக்கியமான எதிர்க்கட்சியான காங்கிரஸ் போராடி வருகிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு எதிரான காங்கிரஸின் ஜனநாயகப் போராட்டங்களைத் திசைதிருப்பும் நோக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ராமர் கோயில் பிரச்சனையோடு காங்கிரஸின் போராட்டத்தை ஒப்பிட்டு கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
எல்லா பிரச்சினைகளிலும் மத அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஒன்றிய அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. தனது செயலற்ற தன்மையை இன்னும் எத்தனைக் காலத்திற்கு மத அடிப்படைவாத சிந்தனை மூலம் மறைக்க முடியும் என்று ஒன்றிய அரசு நம்புகிறது என தெரியவில்லை. தனது பதவிக்கு உள்ள பொறுப்புத்தன்மையை உணராமல் செயல்பட்டு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.