மு.க.ஸ்டாலின் தினந்தோறும் நளினி சிதம்பரம் வீட்டிற்கு சென்று ஒப்பாரி வைக்கலாம் -எச்.ராஜா

 
h

பிரதமரிடம் ஒப்பாரி வைப்பதற்கு பதிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின், நளினி சிதம்பரத்தின் வீட்டிற்கு தினந்தோறும் சென்று  ஒப்பாரி வைக்கலாம் என்று கடுமையாக சாடியிருக்கிறார் எச்.ராஜா.

 பாஜக அரசின் எட்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம்தோறும் நடந்து வருகின்றன.  தேனி பங்களாமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பங்கேற்றார்.  கூட்டத்தில் அவர் பேசியபோது,   திமுக என்ற கட்சி ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்தத கட்சி.  அதில் ஒரு சில ஊழல் பட்டியலை மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார்.   திமுக பற்றி எந்த ஒரு ஆதாரமும் வெளியிடத் தேவையில்லை.   ஏனென்றால் திமுக என்றாலே ஊழல் கட்சி என்று சாதாரண மக்களுக்கு கூட தெரியும்.  சர்க்காரியா கமிஷன் சொன்னது போல அவர்கள் விஞ்ஞான ரீதியாக செய்யக்கூடியவர்கள் என்று பேசினார்.

st

 தொடர்ந்து பேசிய எச். ராஜா ,  மு .க. ஸ்டாலின் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை . மத்திய அரசு செய்யும் நலத்திட்டங்கள் மட்டுமே தமிழக மக்களுக்கு வந்து சேருகின்றன.  அந்த நலத்திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது  திமுக.   இப்படி ஒரு மோசமான ஆட்சியை பார்க்கவே முடியாது. முதலமைச்சர் முதல் அனைவரும் உளறுபவர்களாகவே இருக்கிறார்கள் என்றார் .

அவர் மேலும் பேசியபோது,  நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் போட்டதாக முதல்வர் சொல்கிறார்.  அந்த தீர்மானம் வெறும் வெற்று கடுதாசி தான்.  கடந்த 2010ஆம் ஆண்டு திமுக இடம் பெற்றிருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் தான் நீட் தேர்வு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.   கடந்த 2013ம் ஆண்டு முதல் முறையாக தேர்வு நடத்தப்பட்டது .  மு. க. ஸ்டாலின் அவருடைய அப்பா கருணாநிதியும் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறி இருக்கலாமே? என்று கேட்கிறார்.  

 முதலமைச்சருக்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டுமென்றால் அவர் தட்ட வேண்டிய இடம் நீதிமன்றத்தில்.  அதிலும் குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில்.  உச்சநீதிமன்றத்தில் நீட்டுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம்.    இதனை திசை திருப்பும் வேலையைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார்.   தமிழ்நாட்டில் 33 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நலத்திட்டங்களை வழங்க வந்த பிரதமரிடம் ஒப்பாரி வைக்கிறார் முதல்வர்.   பிரதமரிடம் ஒப்பாரி வைப்பதற்கு பதிலாக நளினி சிதம்பரத்தின் வீட்டிற்கு தினம் தோறும் சென்று ஒப்பாரி வைக்கலாம் முதல்வர் என்று விமர்சித்தார்.