எடப்பாடி ஆதரவாளர்கள் மீண்டும் பரப்பும் வீடியோ
செங்கோலுடன் நிற்கும் அந்த எம்ஜிஆரின் வீடியோவை மீண்டும் பரப்பி வருகின்றனர் எடப்பாடி ஆதரவாளர்கள். அந்த செங்கோலை எம்ஜிஆர்-ஜெயலலிதா இருவரும் இணைந்து ஒரு தொண்டருக்கு கொடுக்கிறார்கள். அந்த அதிமுக தொண்டர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்று அவர்கள் இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்த வீடியோவை அதிகம் பரப்பி வந்தனர் எடப்பாடி ஆதரவாளர்கள். தற்போது அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிறார் என்று அவரது தரப்பினர் சொல்லி வரும் நிலையில் இந்த வீடியோ மீண்டும் அவரது ஆதரவாளர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
எம்ஜிஆர் -ஜெயலலிதாவும் பிடித்துக் கொண்டு நிற்கும் செங்கோலை அவர்களுடன் சேர்ந்து பிடித்திருக்கும் அந்த நபர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர் . கடந்த 2019 ஆம் ஆண்டிலும் இதே காரணத்தைச் சொல்லி அதிகம் பகிரப்பட்டு வந்தபோது, அப்போது அது குறித்து கே. சி. பழனிச்சாமி விளக்கமளித்திருந்தார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மதுரையில் அனைத்து எம்.ஜி.ஆர் மன்றங்களின் சார்பில் நடந்த மாநாடு அது. 1986 இல் நடந்த மாநாட்டில் ரசிகர்கள் ஜெயலலிதாவின் மூலமாக அந்த செங்கோலை எம்ஜிஆருக்கு கொடுத்தனர். அப்போது அங்கிருந்து தொண்டர் ஒருவரையும் அழைத்து அந்த செங்கோலை பிடிக்க வைத்தார் எம்ஜிஆர். நான் அப்போது அந்த மேடையில் இருந்தேன். இது நடந்தது 1986 ஆம் ஆண்டில் . ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்குள் வந்ததோ 1988 ஆம் ஆண்டில் தான்.
சேலம் கண்ணன் என்பவர் நடத்தி வந்த ஜெயலலிதா பேரவையில் எடப்பாடி பகுதியில் பொறுப்பாளராக இருந்து அதன் பின்னர் அதிமுகவிற்கு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி . தொண்டர்களால் உருவாக்கப்பட்டு கொடுக்கப்படும் செங்கோலை தொண்டரும் பிடிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பித்தான் அப்படிச் செய்தார். அந்த நிகழ்ச்சியை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அந்த மேடையிலும் அப்போது இருந்திருக்கிறேன். அது எடப்பாடி பழனிச்சாமி அல்ல என்று உறுதியாக அவர் சொல்லியிருந்தார் .
இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூடவிருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சொல்லி வரும் நிலையில், அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆகிறார் என்று அதற்கான ஏற்பாடுகளும் தயாராகி வரும் நிலையில், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த செங்கோலை கொடுத்தார்கள் என்கிற ரீதியில் இந்த வீடியோவை மீண்டும் அவரது ஆதரவாளர்கள் அதிகம் பரப்பி வருகின்றனர்.